
சாத்தூர் அருகே குலசேகரபுரத்தில் கடந்த 6-ம் தேதி நடந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் இன்று உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குலசேகரபுரத்தில் பட்டாசு தயாரிப்பதற்காக கடந்த 6-ம் தேதி ரகு ( 45), அவரது உறவினர் முகேஷ் (22) ஆகியோர் சென்றனர். அப்போது 2 பேரும் பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முகேஷ், ரகு ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் பட்டாசு ஆலை உரிமையாளர் ரகு, உறவினர் முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.