பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை தொடங்கியுள்ளது.
நாடு முழுதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், அதில் ஆதார், பான் எண் உள்ளிட்ட தகவல்களை இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை கணினி வாயிலாக வழங்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை முடிவு செய்தது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் குறிப்பிட்டபோது, பட்டாவில் தற்போது இடம்பெறும் விவரங்கள் உரிமையாளர் குறித்த அடையாளத்தை உறுதி செய்ய இது போதுமானதாக இல்லை. எனவே பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம். ஒரு நபர் பெயரில் எத்தனை சொத்துக்கள் இருக்கின்றன என்பதை அரசு சார்ந்த துறைகள் தெரிந்து கொள்ள இது உதவும்.
மேலும், நில அபரிப்பு போன்ற மோசடிகளை தடுக்கவும் இது உதவும். இதனால், புதிதாக பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போரிடம் ஆதார் விவரம் பெறும் பணிகள் தொடங்கியுள்ளது என்றனர்.