
தமிழகத்தில் சிறப்பு மிக்க வைணவ ஸ்தலங்களிவல் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா இன்று பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக இன்று ஜூலை 14 காலை 9:30 மணிக்கு மாடவீதிகள் சுற்றி கொடிபட்டம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க வேதபாராயண முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி, மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து தினமும் காலை 10 மணிக்கு மேல் ஆண்டாள், ரங்க மன்னார் மண்டபம் எழுந்தருளிலும், இரவு வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. ஜூலை 18 காலை 10 மணிக்கு கோயில் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்கல சாசனமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. ஜூலை 20 அன்று இரவு 7 மணிக்கு மேல் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் ரங்கமன்னார் சயனசேவை உற்சவம் நடக்கிறது. ஜூலை 22 காலை 8;05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்ட திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்யாண மண்டபங்கள். தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் தினமும் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர். சுகாதார ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.