
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு இன்று முதல் ஐயப்பனுக்கு ஆடி மாத நெய் அபிஷேகம் பூஜை வழிபாடு துவங்கியது.இன்று முதல் நாளிலேயே ஐயனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆண்டுதோறும் மாதப்பிறப்பன்று 5 நாட்கள் பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனி மாத பூஜைக்காக கடந்த ஜூன் 15ஆம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனி மாத பூஜையை முடிந்து 20ஆம் தேதி சகஸ்ரகலச பூஜையும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கமான பூஜைகளுக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட்டது.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
சபரிமலை திருநடை இன்று அதிகாலை 5 மணிக்கு கர்க்கிடக மாச பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.கோயில் தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமை வகித்தார்.கோயில் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி தலைமை வகித்து கோவில் கருவறை திறந்து தீபம் ஏற்றினார். ராஜீவரரின் மகன் கந்தர் பிரம்மதத்தனும் தந்தையுடன் இருந்தார். தொடர்ந்து மேல்சாந்தி, கணபதி, நாகர் கோவிலை திறந்து, தீபம் ஏற்றிய பின், 18ம் படி முன் உள்ள தீக்குண்டத்தில் தீ மூட்டி, ஐயப்ப பக்தர்களுக்கு, தந்திரி கண்டரர் ராஜீவர், கண்டரர் பிரம்மதத்தர், மேல்சாந்தி ஆகியோர் விபூதி பிரசாதம் வழங்கினர்.
வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும். வரும் ஆக 10இல் இந்த வழிபாடு நடைபெறுகிறது.
இதனையடுத்து ஆவணி மாத பிறப்பு பூஜைக்காக ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21ஆம் தேதி வரையிலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நடைபெறும். திருவோணம் திருவிழாவிற்காக ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரையிலும் கோவில் நடை திறந்திருந்திருக்கும். ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று திருவோணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நடைபெறும். அதன் பின்னர் அடைக்கப்படும் நடை டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் இதற்காக திட்டமிட்டு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளா வனத்தில் பெய்த மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருகிறது.ஐயனை தரிசிக்க பாஜக வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று சபரிமலை வந்து இன்று ஐயப்பனுகு நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.