
வத்திராயிருப்பு அருகே சதுரகிரி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை காட்டுத்தீ பற்றியதால் அமாவாசை தரிசனத்திற்காக மலைக்குச் சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் சதுரகிரி மலையும் அதன் மீது சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளது.
இங்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட்டில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் இல்லாததால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு செடி கொடிகள் காய்ந்து சருகுகளான நிலையில் காணப்பட்டது. இதனால் காட்டுத்தீ வேகமாக பரவியது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு மேல் பச்சை மரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
இதனால் நேற்று அமாவாசை தரிசனத்திற்காக சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி செல்ல தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.
சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறை அலட்சியம்:
சதுகிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயிலில் சோதனை செய்யப்பட்டு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் அவர்களிடம் இருந்தால் அகற்றப்படுவது வழக்கம். சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.10 செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் சமீப காலமாக வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பதோடு தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றனர்.
சோதனை செய்வதில்லை. மேலும் மலைப்பாதையில் 5 இடங்களில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு அறை கட்டப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு பணிக்கு யாரும் இருப்பதில்லை. இதனால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.