
ஸ்ரீவிலி ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பகுமானங்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டன.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், திருமாலுக்கு பூமாலை சூட்டியதுடன், பாமாலையும் சூட்டி இறுதியில் அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டார். இதனால் அவருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
ஆண்டாள் திருமணம் செய்து கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதரை என்பதால், இவ்விரு ஊர்களுக்கும் சம்பந்த உறவும், மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் உண்டு.
இவ்வகையில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து மங்களப்பொருட்கள் காணிக்கையாகக் கொண்டு செல்லப்பட்டு ரங்கநாதருக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்திற்கு ஸ்ரீரங்கம் கோயில் மங்களப்பொருட்கள் பகுமானமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஜூலை 22ம் தேதி நடக்கவுள்ளதை முன்னிட்டு, இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டுச்சேலை, மஞ்சள், குங்குமம், பழங்கள், மாலைகள், தாம்பூலம் ஆகியற்றுடன் வடபத்ரசாயி பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட பகுமானங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதற்கென இன்று ஆண்டாள் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையருமான சிவராம்குமார், அர்ச்சகர் சுந்தர் பட்டர், அகிலா ராமசுப்பு, திருச்சி தொழிலதிபர் என்.வி.வி.முரளி, திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்திவிழா கமிட்டி, சங்கீத ஆதி தமிழ்மூவர் மன்ற ஆகியற்றின் ஆலோசகர் சந்திரசேகரன் ஆகியோருடன் ஸ்ரீரங்கம் கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் ரங்கநாதர் கோயில் பகுமானங்களை ஆண்டாள் கோயிலில் சமர்ப்பித்தனர்.
இந்த பகுமானங்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஸ்தலத்தார் மற்றும் ஸ்தானிகம் ரமேஷ் பட்டர், சுதர்சன் பட்டர் உள்ளிட்டோர் வரவேற்று பெற்றுக் கொண்டனர். உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பகுமானங்களை ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் இணை ஆணையர் சிவராம்குமார், அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஆகியோர் ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஸ்தானீகம் ரமேஷ்பட்டர், சுதர்சன் பட்டர் ஆகியோரிடம் வழங்கினர், அருகில் அகிலா ராமசுப்பு, திருச்சி தொழிலதிபர் என்.வி.வி.முரளி, மன்னார்குடி சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.