கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த மனிதாபிமானத்துடன் உத்தரவு இடுவதை பரிசீலிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
கோவில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்பட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ள மனு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் முதலாளித்துவ பாசிச மனநிலை பிரதிபலிக்கிறது.
வருமானம் குறைவாக உள்ள கோவில்களில் கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் கூட கொடுக்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை கூறுவது மனிதாபிமானமற்ற செயல்.
சட்டப்படி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்பட வேண்டும் என்பது தொழிலாளர் நல சட்டம் இதனை செயல்படுத்த மறுக்கும் நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அது தனியார் ஆனாலும் அரசின் கீழ் உள்ளதானாலும்.
இதுவே வருமானம் இல்லாத கோவில்களில் நியமிக்கப்படும் செயல் அலுவலர்களுக்கு சம்பளம் வழங்குவது இல்லையா?
மேலும் கோவில் நிலங்களுக்கான குத்தகை வீடு கடைகளுக்கான வாடகை முதலியவற்றை முறையாக வசூலிக்காமல் அதிகாரிகளாக உள்ளவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?
அதிக வருமானம் உள்ள கோவில்களின் வருமானம் ஆடம்பரத்திற்கும் அரசியல் செய்வதற்கும் வீணடிக்கப்படுகிறது. எங்கோ இருக்கும் அதிகாரியின் காருக்கு பெட்ரோல் கோவில் நிதியிலிருந்து செலவழிக்க படுகிறது. இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டும்.
எப்படி ஒருகால பூஜைகூட நடக்காத கோவிலுக்கு நிதி ஒதுக்கி முறையாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமோ, அதுபோல கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் போதிய வருமானம் தகுதி திறமை அனுபவம் முதலானவை கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். அதிலும் அரசின் தொழிலாளர் நல சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் தற்காலிக ஊழியர்களுக்கு கூட வழங்கப்பட வேண்டும்.
கோவில் நிதியில் சுயநலமாக, சொகுசாக வாழும் அரசியல்வாதிகளுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் கோவில் பணியை புண்ணிய காரியமாக செய்து வரும் திருப்பணி தொண்டர்கள் வயிற்றுப் பசி புரியுமா?..
எனவே நீதிமன்றம் இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு இடைக்கால நிவாரணமாக கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த மனிதாபிமானத்துடன் உத்தரவு இடுவதை பரிசீலிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்