
சதுரகிரி மலையில் நேற்று முன் தினம் பற்றிய காட்டுத்தீ நேற்று இரண்டாம் நாளாக தொடர்ந்து எரிந்தது. அங்கு தீயை பற்ற வைத்த மலைவாழ் பழங்குடி இனத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சதுரகிரி மலையில் கடந்த ஜூலை 15-ம் தேதி காட்டுத்தீ பற்றியது. இதனால் அமாவாசை தரிசனத்திற்காக மலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அடிவாரம் வர முடியாமல் தவித்தனர். வனத்துறையினர் மூன்று நாட்களாக போராடி தீயை அணைத்தனர்.
இந்நிலையில் நேறறு முன் தினம் இரவு சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட 5 வது பீட் மறறும் ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக 6வது பீட்டிற்கும் பரவியது. வனச்சரகர்கள் செல்லமணி, பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரு குழுக்களாக பிரிந்து இரண்டு நாட்களாக போராடி நேற்று இரவு தீயை அணைத்தனர்.
ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ந்து இரு தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்தது வனத்துறையினருக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் மலையடிவாரமான தாணிப்பாறை ராம் நகர் பழங்குடியின மக்கள் குடியிருப்பை சேர்ந்த யானை கருப்பன் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில்,
மலைவாழ் மக்கள் மலையில் உள்ள மூலிகை மற்றும் தேன், நெல்லி, சாம்பிராணி போன்ற மகசூல் தரும் பொருட்களை சேகரிப்பதற்கு வனத்துறை தடைவிதித்ததாலும், மலைப்பாதையில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய அனுமதி நாட்களில் தற்காலிக கடை வைக்க அனுமதி மறுத்ததாலும், ஆடு மாடுகள் மேய்ப்பதற்கு வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்ததாலும் ஆத்திரமடைந்து வனத்திற்கு தீ வைத்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.