நாடுமுழுவதும் லட்சக்கணக்கான பெண்கள், சிறுமிகள் தொலைந்து போன செய்தி அதிர்ச்சி அளிக்கிறது, இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் சதித் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில் நாடுமுழுவதும் கடந்த 3ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் தொலைந்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இது சாதாரண விஷயமாக தெரியவில்லை. திட்டமிட்டு நடக்கின்ற சதியாக கூட இருக்கலாம். தமிழகத்தில் சுமார் 57 ஆயிரம் பேர் காணவில்லை.
தமிழகத்தில் காவல்துறை ஆணையர் இதற்காக தொலைந்து போன குழந்தைகளை தேடி கண்டுபிடிக்க ஆபரேஷன் ஒன்றை அறிவித்து, பல குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தி தொலைத்தவர்கள் பற்றி முழு தகவலும் வெளியிடப்பட வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், காவல்துறை இணைந்து இந்த ஆபத்தை தடுக்கவும், காணாமல் போனவர்களைக் கண்டு பிடிக்கும் பணியை தீவிரப் படுத்தவும் வேண்டும். இதன் பின்புலத்தில் மதவாத பயங்கரவாத சக்திகள் இருக்கலாம். கடத்தப்படும் பெண்கள் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தும் அபாயமும் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் சில ஆண்டுகளாக சிறுமிகள் சீரழித்து கொல்லப்படும் அவலம் தொடர்கிறது. இதற்கு கடுமையான நடவடிக்கை தான் தீர்வு என மக்கள் நினைக்கின்றனர். உடனடியாக இத்தகைய கயவர்களை என்கவுண்டர் செய்வதைக் கூட மக்கள் வரவேற்கிறார்கள்.
நீதித்துறையும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பெண்கள், சிறுமிகள் மீது வன்முறையை நடத்துவோர் மீது சட்டத்தின் அடிப்படையை தாண்டி தார்மிக கடமையில் நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய ஈவிரக்கமற்ற மனிதர்களுக்கு ஜாமீன் பெற்று வெளியே வந்து பழிவாங்கும் போக்கால் பொது மக்கள் இந்த கயவர்களின் அராஜகத்தை கண்டும் காணாமல் போகிறார்கள் என்பதை வேதனையுடன் சுட்டி காட்டுகிறோம். பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களை தடுக்க பொது மக்கள் முன்வராததற்கு இத்தகைய பயம் காரணமாக உள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளின் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை இதற்காக பிரத்யேகமாக ஏற்படுத்துவது மேலும் நல்ல பலனைத்தரும்.
பெண்கள் சிறுமிகள் தொலைந்து போவது தனிப்பட்ட காரணங்களுக்காக என கொள்ளாமல் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்