
அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல், ராஜபாளையம் வழியாக மின்சார இரயில் இஞ்ஜின் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில்,
01-10-2023 முதல் ராஜபாளையம் வழியாக கீழ்க்காணும் ரயில்கள் மின்சார இரயில் இஞ்சின்கள் கொண்டு இயக்கப்படும்:
1) பொதிகை அதிவிரைவு வண்டி (12661/12662)
2) சிலம்பு அதிவிரைவு வண்டி (20681/20682)
இனி சென்னை முதல் செங்கோட்டை வரை முழுவதும் மின்சார இஞ்ஜின்களோடு இயக்கப்படுவதால் பயண நேரம் குறையும், தாமதங்கள் தவிர்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது செங்கோட்டையில் இருந்து டீசல் எஞ்சினுடன் கிளம்பும் பொதிகை விரைவு ரயிலுக்கு மதுரையில் மின்சார இஞ்சின் மாற்றப்பட்டு, சென்னைக்குச் செல்கிறது. அதுபோல் செங்கோட்டையில் இருந்து டீசல் எஞ்சினுடன் கிளம்பும் சிலம்பு ரயிலுக்கு விருதுநகரில் வைத்து மின்சார எஞ்சின் மாற்றப்பட்டு சென்னை செல்கிறது. இனி அக்டோபர் முதல் தேதி முதல் முழுதும் மின்சார இஞ்சினில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கான உப மின் நிலையம் அமைக்கும் பணிகள் செங்கோட்டை மற்றும் ராஜபாளையம் ரயில் நிலையங்களில் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் – செங்கோட்டை ரயில் பாதை ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது செங்கோட்டை முதல் தாம்பரம் வரை திருநெல்வேலி வழியாகச் செல்லும் சிறப்பு விரைவு ரயில் மின்சார இஞ்சினுடன் இயக்கப்பட்டு வருகிறது.