மதுரையில் ரயில் தீ விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ஆன்மிக பயணமாக வந்த ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்தில் சிக்கி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சப்தமன் சிங் (64), மிதிலேஷ்வரி (65) உட்பட 10பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.
தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது வரை தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்ப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்தில் உயிரிழந்த 10பேரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
ரயில் பெட்டிக்குள் டீ தயார் செய்வதற்காக சிலர் முயற்சித்தபோது சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பரபரப்பான மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் மதுரை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும், ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ரயில்வே துறை சார்பில் விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து அமைச்சர், ரயில்வே உயரதிகாரிகள், காவல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரயில் தீ விபத்து தொடர்பாக பயணிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.