இன்று திருநெல்வேலி தினம் தென் பொதிகையில் பிறந்த மொழி தென்நாடே வளர்ந்த மொழி . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே இயங்கும் பழமையான நகரம் திருநெல்வேலி.
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனச் சம்பந்தரும், “தண் பொருநைப் புனல்நாடு’ எனச் சேக்கிழாரும், “பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி’ என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்
“திருநெல்வேலி” என கம்பீரமாகவும், “நெல்லை” என செல்லமாகவும் அழைக்கப்படும் இம்மாவட்டம், பரந்து விரிந்து இருந்த மாவட்டமாகும். 3 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த பூமிக்கு வணிகம் செய்ய வந்த பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியார், 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி “திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்கினர்.
பிரிப்பு
அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி, (இளைய) தென்காசி மாவட்டங்களும், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் இணைந்து இருந்தன. காலப்போக்கில் விருதுநகரும், ராமநாதபுரமும் பிரிந்து, புதிய மாவட்டங்களாக உருவாயின. பின்பு, தூத்துக்குடியும் தனியாகப் பிரிக்கப்பட்டு, வ உ சிதம்பரனார் மாவட்டமாக உதயமானது.
திருநெல்வேலிக்கு “திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம்” எனப் பெயரிடப்பட்டது.
1997-ம் ஆண்டு, மாநில அளவில் உருவாக்கப்பட்ட சர்ச்சைகளின் காரணமாக, மாவட்டங்களில் இருந்து தலைவர்களின் பெயர்கள் விடைபெற்றன. சமீபத்தில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. என்னதான் தனித்தனி மாவட்டங்களாகி விட்டாலும், தூத்துக்குடியும், தென்காசியும் இன்னும் நெல்லையின் சகோதர மாவட்டங்களாகவே பின்னிப்பிணைந்துள்ளன.
திருநெல்வேலி என்றதும், உலகின் எந்த மூலையில் இருப்போருக்கும் நினைவுக்கு வருபவை, திருநெல்வேலி அல்வாவும், தாமிரபரணி ஆறும் தான். திருநெல்வேலியின் அடையாளங்களாக இவையிரண்டும் காலங்காலமாக நிலைத்திருக்கின்றன.
நெல்லுக்கு வேலி
வேணுவனம், திருநெல்வேலியான கதை
வயல்வெளிகள் நிரம்பிய திருநெல்வேலியின் பண்டைய பெயர் “வேணுவனம்” என்றும், கொட்டித்தீர்த்த மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாமல் “நெல்லுக்கு வேலியிட்டு நெல்லையப்பர் (இறைவன்) காத்ததால் நெல்வேலி என்று பெயர் பெற்று, அதுவே பின்பு “திருநெல்வேலி” என நிலைத்திற்று” என்றும் பெயர்க்காரணம் வழங்கப்படுகிறது.
நெல்லையின் பிரதான அடையாளம், நெல்லையப்பர்-காந்திமதியம்மன் ஆலயம். ஆனி மாதந்தோறும் நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், திருவாரூர் தியாகராஜர் தேர்களுக்கு அடுத்து 3-வது பெரிய தேர், நெல்லையப்பர் தேராகும்.
பொதிகைமலை – தமிழ்மொழி பிறந்த திருநெல்வேலி மாவட்டம் :
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் பொதிகை மலையில் தான் இயற்றப்பட்டது. இமயமலைக்கு நிகரானது தென்னிந்தியாவின் கைலாயம்தான் அகஸ்தியர் வாழும் பொதிகை மலை.தமிழ் தோன்றிய இடமாக கருதப்படுவதால் பொதிகை தமிழ் கூறும் நல்லுலகின் தனிக் கவனம் பெறுகிறது. அருவிகள் ஆர்த்தெழும் திருக்குற்றாலம் அடங்கலாக பொதிகை மலைத் தொடர் அகன்று அமைந்திருக்கிறது. இத்தொடரின் முத்தாய்ப்பாக அகத்தியர் தங்கிய ஏக பொதிகை விலங்குகிறது. குற்றாலம் தேனருவிக்கு மேலே உள்ள பரதேசி புடவு தமிழ் தோன்றிய இடம் இது என்பதற்கு சான்றாக உள்ளது. இங்கு பொறிக்கப்பட்டுள்ள 15 எழுத்துக்களை இதுவரை யாராலும் படித்தறிய முடியவில்லை. அந்த எழுத்துக்கள் தமிழின் வட்டெழுத்து, தமிழிக்கு முந்தைய ஆதி எழுத்துக்களாக அறியப்பட்டுள்ளன
“தென்னகத்து ஆக்ஸ்போர்டு”
திருநெல்வேலி மாநகரப்பகுதிக்குள், திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டை நகரங்களாக விளங்குகின்றன.
நடுவில் ஓடும் தாமிரபரணி ஆறு, புவியியல்ரீதியாக இரு நகரங்களையும் பிரித்தாலும், தன் நீர் வளத்தால் இணைத்தே வைத்திருக்கிறது. அதோடு, திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் 178 ஆண்டு பழமை வாய்ந்த “சுலோசனா முதலியார்” ஆற்றுப்பாலமும் இம்மாநகரின் தன்னிகரில்லா தனித்த அடையாளமாக விளங்குகிறது.
நெல்லையோடு இணைந்த பாளையங்கோட்டைக்கு தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்விப்பணியில் தமிழகத்திலேயே சிறந்து விளங்கி வருகிறது, பாளையங்கோட்டை.
இங்கு சாலைகள் தோறும் கல்விச்சாலைகளை காண முடியும். ஒரு நகரத்தில் பள்ளி, கல்லூரிகள் இருப்பது இயல்பு. ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்காகவே ஒரு நகரம் இருப்பது இங்கே நெல்லையில் தான். 55 ஆண்டு பெருமை வாய்ந்த திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியும், அதனுடன் இணைந்து சமீபத்தில் தொடங்கப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையும் (Super Speciality Hospital) அமைந்திருப்பது, பாளையங்கோட்டையில் தான்.
புலிகளின் பொற்காடு பொதிகைமலை :
இந்த மலைகளில்தான் இந்தியாவிலேயே அதிக புலிகள் இருந்தது. இது புலிகளின் பொற்காடு என்றும் கூறப்பட்டது. புலிகள் உள்பட காட்டு விலங்குகள் அதிகம் இருப்பதால் இம்மலை ஒன்றும் அந்த அளவுக்கு சுலபமாக ஏறக்கூடியது அல்ல.
கடல் மட்டத்திலிருந்து 6200 அடி உயரத்தில் உள்ளது பொதிகை மலை. இது ஆனை மலையின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த மலை மகேந்திரகிரி , பாபநாசம் உள்ளிட்ட மலைகளையும், முண்டந்துரை காடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
அதிக மழை பெறும் பொதிகைமலை :
ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர் திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு பலத்தக் குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும்!. பொதிகை மலையில் அமைந்திருக்கும் மாஞ்சோலை இந்தியாவில் மிக அதிக மழைபெறும் பகுதிகளில் ஒன்று.
பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான “பொருநை” என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் “பூங்குளம்” என்ற சுனை பொதிகைமலையில் உள்ளது.திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணி இங்குதான் பிறக்கிறது. இந்தச் சரணாலயம் 14 ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியை உருவாக்குகிறது. இந்த ஆறுகள் மற்றும் நீரோடைகளில், தாமிரபரணி, ராமநதி, கடனா நதி, காரையார், சேர்வலார், மணிமுத்தாறு, பச்சையாறு, கோதையாறு மற்றும் கல்லாறு ஆகியவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களுக்குத் தேவையான நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு முதுகெலும்பாக அமைகின்றன. காரையார், லோயர் அணை, சேர்வலார், மணிமுத்தாறு, ராமநதி, கடனா நதி ஆகிய பெரிய அணைகள் இந்த வனப்பகுதியில் அமையப்பெற்றுள்ளன.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தாமிரபரணி நதிக்கரையில் துவங்குகிறது -தமிழ்நாடு அரசு
இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை:
அபூர்வ மூலிகைகள் மனதை கவரும் அருவிகள் சிற்றோடைகள் ஆறுகள் எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள் புல்வெளிகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகைமலை இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை.
தென்னிந்தியாவிலே மிக உயரமான இடத்தில் இருக்கும் கோவில். பொதிகைமலை அகத்தியர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இப்பொதிகைமலை வரலாற்று சிறப்பு மிக்கது. இமயமலை பயணத்தை தோற்கடிக்கும் பொதிகைமலை (6132 அடி)
அகத்திய மலை
இந்த மலையில்தான் தனது பெரும்பான்மையான காலத்தை அகத்தியர் கழித்தார் என்பதால், இம்மலை அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது
உலகின் பாரம்பரிய சின்னம் பொதிகைமலை யுனெஸ்கோ :
பொதிகைமலையில் காணப்படும் அடர்த்தியான, இருண்ட வனப்பகுதி ஒவ்வொரு மூலையிலும் ஒரு ஆச்சரியத்தின் வாக்குறுதியுடன் நமக்குப் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இது இந்திய நாட்டில் அறிவிக்கப்பட்ட 17 வது புலிகள் காப்பகமாகும். உலகின் வெப்பமண்டல ஈரப்பதமான பசுமையான காடுகளைக் குறிக்கும் வகை -1 புலி பாதுகாப்பு பிரிவு (டி.சி.யு) எனக் களக்காடு – முண்டந்துறை புலி இருப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் அமைந்துள்ள அகத்திய மலைத்தொடர் வனவிலங்கு சரணாலயத்தின் முக்கிய பகுதியை உள்ளடக்கிய இந்தச் சரணாலயம் இந்தியாவில் பெயரிடப்பட்ட ஐந்து பல்லுயிர் மற்றும் எண்டெமிசம் மையங்களில் ஒன்றாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் விளங்கி வருகிறது
இன்னும் எண்ணற்ற பெருமைகள், நெல்லைக்கு உண்டு. பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
மாவட்டமாக உருவெடுத்து இன்று 233 -வது பிறந்தநாள் காணும் “திருநெல்வேலிச்சீமை” யின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.