
பதவிப் பிரமாணத்திற்கு எதிராக செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய நீதிமன்றத்தில் இந்து முன்னணி வழக்கு தொடரும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கலந்து கொண்டது அவர் சார்ந்துள்ள துறைக்கு எதிரானது. பாராபட்சம் இல்லாமல் செயல்படுவேன் என்று அமைச்சராக அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது சட்ட மீறலாகும்.
சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கவும், போற்றவும் ஏற்பட்டது தான் திருக்கோவில்கள். அதனை பராமரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது தான் இந்து சமய அறநிலையத் துறை என தமிழக அரசு கூறுகிறது. ஆனால் சனாதனத்தை ஒழிக்க நடந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தமிழக அரசு திருக்கோவில்களை அழிக்க செயல்படும் மறைமுக திட்டமோ என சந்தேகம் எழுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் அரசு பதவி ஏற்றதில் இருந்து, கோவில் வழிபாடுகளில் தலையிட்டு சீரழித்த பல நிகழ்வுகளும், பராமரிப்பு இன்றி மிக முக்கியமான கோவிலான அரங்கன் கோபுரம் சிதைந்ததும், குற்றாலநாதர் கோவில் சட்டவிரோத கடைகளால் தீப்பிடித்து அரசமரம் மற்றும் விநாயகர் கோவில் தீப்பிடித்து அழிந்ததும் என பலவற்றைக் கண்டோம்.
தங்க நகைகளை இரகசியமாக உருக்கி வங்கிகளில் இருப்பு வைப்பது குறித்து இதுவரை முழு தகவலையும் அரசு வெளியிடவில்லை.
மேலும் வேற்று மதத்தினர் ஆக்கிரமித்துள்ள கோவில் சொத்துக்களை மீட்க சரியான நடவடிக்கையை அமைச்சரும் அதிகாரிகளும் எடுப்பதில்லை.
இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழக அரசு இந்து கோவில்களை அழிக்க திட்டமிடுகிறது என்ற சந்தேகத்தை மேலும் உறுதிபடுத்துகிறது.
அதனை ஆமோதிப்பது போல இருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் நடவடிக்கை.
சனாதன இந்து சமயத்தை ஒழிக்க நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட சேகர் பாபு அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தமிழக ஆளுநர் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அமைச்சராக இருக்க தகுதியற்ற சேகர் பாபு அவர்களை தகுதி நீக்கம் செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கையை இந்து முன்னணி மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.