
எல்லோரும் தூக்கு போட்டு தொங்குங்க என்று பொதுமக்களைப் பார்த்துப் பேசி, கரூர் கலெக்டர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு ரெளடி மாதிரியே நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் துவக்கப்பள்ளியில் அருந்ததியினர் சமூக பெண்மணி சமைத்த உணவை சாப்பிட மறுக்கும் பள்ளி மாணவர்கள் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இதை விசாரிக்கச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கடந்த 5 ம் தேதி அன்று விசாரணை செய்த போது பெற்றோர்கள் யாரையும் பேசவே விடாமல் அனைவரது செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டு பெற்றோர்களைப் பார்த்து, “நீங்கள் தினந்தோறும் கூலி வேலைதான் செய்கின்றீர்கள். உங்களை எல்லாம் வேலையை விட்டு தூக்கிவிட்டால் இனி சோத்துக்கு இங்கதானே வந்தாகவேண்டும்” என்றும், “இனி நீங்கள் எந்தவொரு தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய விடமாட்டேன்” என்றும், “உங்கள் குழந்தைகள் இனி இந்தியாவில் எந்தவொரு பள்ளியிலும் படிக்க முடியாதபடி செய்து விடுவேன், நீங்கள்லாம் தூக்கில் தொங்குங்க” என்றும் தரங்கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தியும் நாகரீகமில்லாமல் மிரட்டல் விடுத்து பேசினார். அவரது செயலே வித்தியாசமாக இருந்தது… என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்களிடம் பத்திரிகையாளர்கள் விசாரித்த போது, காலை உணவு சமைக்கும் பெண்ணின் குடும்பத்தினர் மதுபோதையில் ஊர் மக்களைப் பார்த்து தகாத வார்த்தைகளால் தரக்குறைவாகப் பேசியதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றும், தலித் அமைப்பை சேர்ந்த ராஜகோபால் என்பவர் பள்ளி நடக்கும் நேரத்தில் பள்ளிக்குள் சென்று குழந்தைகளை மிரட்டியுள்ளார். இதனால் பள்ளிக்குச் செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். காலை உணவுத்திட்டம் என்ற நல்ல பெயரை இவரை போன்றோர்கள் கெடுத்து விடுவது போல் உள்ளது என்றும் கூறினர்.
மேலும், காலை உணவுத்திட்டத்தில் உணவு அருந்தாவிட்டால் அனைவரையும் கைது செய்து விடுவோம் என்றெல்லாம் மிரட்டுபவர்தான் ஒரு ஆட்சியரா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், தமிழக அளவில் 3 முறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டும், கடந்த 2 1/2 வருடங்களாக கரூர் மாவட்ட ஆட்சியராக அதுவும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தமிழக அளவில் கல்குவாரிகள், கிரஷர் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகளில் திகழும் கரூர் மாவட்டமாக வழிகாட்டிய நிலையில், கல்குவாரிகள் ஒரு சிலவற்றுக்கு சில கோடி ரூபாயை அபராதமாக அரசே விதித்தும் கூட இன்றும் இந்த மாவட்ட ஆட்சியர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் இங்குள்ளவர்கள்.