சென்னை- திருநெல்வேலி உள்பட 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
இன்று பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட 9 வழி தடங்கள்
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- உதய்பூர்
- சென்னை- திருநெல்வேலி
- தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- விஜயவாடா – சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- பாட்னா – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- கேரளா மாநிலம் காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ராஞ்சி – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- ஜாம்நகர்- ஆகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.
சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் நவீன வசதிகளுடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயில்கள் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதுவரை 31 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 26 ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
இதன் அடுத்த கட்டமாக நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் ஒன்பது ‘வந்தே பாரத்’ ரயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று தில்லியில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில், மத்திய அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜ., தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதை அடுத்து தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடுத்தர வருவாய் மக்களின் வசதிக்கு தக்க சிறப்பான சேவையை அளிக்கும் வந்தேபாரத் ரயில்கள், விமான பயணத்தைப் போன்ற சொகுசான உணர்வை அளிப்பதாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் இருந்து சென்னைக்கு 11 மணி நேர பயணத்தில் செல்லும் ஆம்னி ஏசி பஸ்களின் கட்டணத்தை விட 8 மணி நேரத்துக்குள்ளாக செல்லும் வந்தே பாரத் ரயிலின் கட்டணம் (உணவு இல்லாமல்) குறைவு தான் என்ற கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் ‘ஏசி சேர் கார்’ கட்டணம் 1,630 ரூபாய் என்ற அளவிலும், உணவு இல்லாமல் 1,355 ரூபாய் கட்டணமும், சொகுசு பெட்டியில் ஒருவருக்கு ரூ.3,090 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் பயணிக்க பொது மக்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள் என்று கூறப்பட்டது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அனைத்து இந்தியர்களும் புதிய இந்தியாவின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். சந்திரயான்-3 வெற்றியால் சாமானியர்களின் எதிர்பார்ப்பு விண்ணை எட்டியது.
ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றி மூலம் இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பெண்கள் தலைமையிலான நமது வளர்ச்சியை உலகம் பாராட்டியுள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை மேம்படுத்தவே மகளிர் இட ஒதுக்கீடு அரசு கொண்டு வந்தது. இதனால் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும்.. என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக.,வின் 9 ஆண்டு கால ஆட்சியில் ரயில்வே துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த ரயிலில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுடன் பயணித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.