
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, ஆளுநர் ரவியிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் – வி.எச்.பி., தேசிய செயல் தலைவர் அலோக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில், ஆளுநர் ரவியை புதன்கிழமை மாலை 4 மணிக்கு, வி.எச்.பி., தேசிய செயல் தலைவர் அலோக்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, வி.எச்.பி., மாநிலத் தலைவர் சொக்கலிங்கம், வழக்கறிஞர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், வி.எச்.பி.,யின் துறவியர் அமைப்பான அகில பாரதிய சந்த் சமிதி பொதுச்செயலர் சுவாமி ஜிதேந்திரானந்த சரஸ்வதி, கன்னியாகுமரி வெள்ளிமலை ஆசிரமத்தின் நிர்வாகிகள் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி மதுரானந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சந்திப்புக்கு பிறகு அலோக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது:
உதயநிதி முதல்வரின் மகன் என்பதால், அவரது பேச்சை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் பணியில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
வெறுப்பை வளர்க்கும் சக்திகளை தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் ரவியிடம் நேரில் கோரிக்கை விடுத்தோம். அமைச்சர்களே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பேசுவதால், அரசமைப்பு சட்டப்படி தமிழகத்தை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தோம்… என்றார்.