
விழாக்காலமான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு, ஆறு சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுபோல், அதிக வருவாய் ஈட்டும் பொதிகை ரயில் வழித்தடத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. ரயில்வேயில், 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால், தென் மாவட்ட விரைவு ரயில்களில், தீபாவளிப் பண்டிகைக்காக ஊருக்குச் செல்பவர்கள் முண்டியடித்து, முன்பதிவு செய்தனர். இதனால், அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, செங்கோட்டை, கோவை விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல், 300ஐத் தாண்டியுள்ளது.
எனவே சிறப்புரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, ரயில் பயணிகள் மத்தியில் எழுந்தது. இதை அடுத்து, ஆறு சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில், நான்கு சிறப்பு ரயில்களும், கோவை வழித்தடத்தில், இரண்டு சிறப்பு ரயில்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும். மேலும், முக்கிய விரைவு ரயில்களில், இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது என்று கூறினர்.
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், பொதிகை அதிவிரைவு ரயிலுக்கு எப்போதுமே மவுசு அதிகம். எந்நேரமும் கூட்டம் மொய்க்கும் பொதிகை ரயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட வேண்டும் என்று ரயில்வே பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.