spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கிழவிக்கு அருள்செய்யக் கடனுக்குச் சுண்டல் சாப்பிட்ட பெருமாள் -

கிழவிக்கு அருள்செய்யக் கடனுக்குச் சுண்டல் சாப்பிட்ட பெருமாள் –

- Advertisement -
tirupathi perumal in simma vahanam

கிழவிக்கு அருள்செய்யக் கடனுக்குச் சுண்டல் சாப்பிட்ட பெருமாள் – சுவாரஸ்யமான திருப்பதி கதை

திருப்பதி ஏழுமலையான், தடபுடலாக வாத்திய கோஷங்கள் முழங்க வீதியுலா வந்துகொண்டிருந்தார். ஊர்வலம் தெற்கு மாடவீதியில் இருக்கும் அசுவ சாலையை அடைந்தது. வாத்தியங்கள் எல்லாம் திடீரென `கப்சிப்’ என்று அமைதியாகிவிட்டன. அதுவரை அசைந்து, அசைந்து எழிலாய் பவனி வந்த பெருமாளும் அந்தச் சாலையைக் கண்டதும் வேகவேகமாய் ஓடிக் கடந்தார். ‘அட, ஏன் இப்படி ஏழுமலையான் சந்தடியில்லாமல் அவசரமாகக் கடந்துசெல்கிறார்’ என்று நினைத்து அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தால், அதன் பின்னே கர்ணபரம்பரையாகச் சொல்லப்படும் சம்பவம் ஒன்றிருப்பதை அவர்கள் விளக்கினர்.

திருப்பதி
கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பதைப்போல,கடனுக்குச் சுண்டல் வாங்கிச் சாப்பிட்டு, அதை அடைக்க முடியாமல் ஓடும் வேங்கடவன் திருவிளையாடல் இது.’

ஏழுமலை அடிவாரத்தில் உள்ளது சந்திரகிரி. அந்த சந்திரகிரியில்தான் மங்காபுரம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு ஆதரவற்ற கிழவி ஒருத்தி சுண்டல் விற்று வாழ்ந்து வந்தாள். நாள்தோறும் ஏழுமலைமீது கூட்டம் கூட்டமாக மக்கள் ஏறிச் செல்வதைக் கிழவி பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஒருநாள், அப்படி மலையேறும் ஒருவரிடம், நீங்கள் எல்லாம் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டாள். அதற்கு அந்த ஆள்,என்ன பாட்டி, இப்படிக் கேட்கிறாய்…மேலே கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வேங்கடவன் கோயில் இருக்கிறதில்லையா… அவனை தரிசிக்கத்தான் செல்கிறோம்” என்று சொன்னான்.

கிழவிக்கு ஆர்வம் மேலிட, அப்படியா, எனக்கும் இங்கு யாரும் இல்லை. நான் அவனை தரிசித்து இந்தப் பிறவி போதும் என்று வேண்டிக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். அழைத்துச் செல்வீர்களா?" என்று கேட்டாள். உடனே அந்த நபரும்,சரி பாட்டி, என்னோடு வா” என்று சொல்லி அழைத்துச் சென்றார். கிழவியும் திருமலை சென்று வேங்கடவனை தரிசித்தாள். அவள் மனம் குளிர்ந்துவிட்டது. ஆனாலும், வேங்கடவனை தினமும் கண்ணாரக் கண்டு தரிசிக்க ஆர்வம் கொண்டாள். தன்னை அழைத்து வந்த மனிதரிடம், “நான் இங்கேயே தங்கி இறைவனை தரிசித்துக்கொண்டிருக்க விரும்புகிறேன். மேலும், எனக்கு அவனை பிரத்யட்சமாகக் காண வேண்டும் என்று ஆசை” என்றாள்.

“பாட்டி, நாங்கள் சம்சாரிகள். எங்களுக்கு அவனை நேரில் காணும் வழிகள் தெரியாது. ஒருவேளை இந்த மலையிலேயே இருந்துகொண்டு தவம்புரியும் முனிவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்” என்று சொல்லி, கிழவியை அந்த முனிவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டனர்.

பெருமாள்
கிழவி அந்த முனிவர்களிடம், நான் இங்கேயே உங்களுடன் தங்கியிருந்து உங்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன்'' என்று கூறினாள். முனிவர்களும் சம்மதித்தனர். கிழவியும் அங்கேயே தங்கிக்கொண்டு, முனிவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துவந்தாள். `தனக்கு என்ன வேண்டும்' என்று முனிவர்களிடம் அவள் சொல்லவேயில்லை. சில நாள்கள் கழித்து முனிவர்களும் அவளிடம் சென்று,அம்மா, தங்களுக்கு என்ன வேண்டும்?”என்று கேட்டனர்.

கிழவியும், தனக்கு வேங்கடவனை கண்களால் பிரத்யட்சமாகக் காண வேண்டும். அதற்கு உதவ முடியுமா?" என்று கேட்டாள். முனிவர்களுக்கோ ஆச்சர்யம். இதுவரை தவமியற்றி வரும் தங்களுக்கே தரிசனம் கொடுக்காத பெருமாள், எதுவும் அறியாத கிழவிக்கு எவ்வாறு தரிசனம் கொடுப்பார் என்று எண்ணினர். ஆனபோதும் கிழவியின் நம்பிக்கையைக் கெடுக்காமல்,அம்மா, கோயிலுக்குத் தெற்கே இருக்கும் புளியமரத்தின் அடியில் ஒரு புற்று உள்ளது. பெருமாள் அதனுள் அமர்ந்துதான் தவம் செய்து வந்தார். பிறகு பத்மாவதித் தாயாரை மணந்துகொண்டு திருமலையில் கோயில் கொண்டுவிட்டார். நீ அவர் தவமிருந்த புற்றுக்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டு, பெருமாளை தியானித்துக் கொண்டிருந்தால், உனக்கு அவனுடைய தரிசனம் கிடைக்கக்கூடும்” என்று கூறினார்கள். அவர்கள் சொன்னபடியே கிழவியும் புற்றுக்கு அருகில் சென்று அமர்ந்துகொள்ளத் தயாரானாள். ஆனால். பெருமாளை தரிசிக்க வெறும் கையுடன் போகக்கூடாது என்று நினைத்து, சுண்டல் செய்து எடுத்துக்கொண்டு சென்றாள்.

பெருமாள்
ஒவ்வொருநாளும் சுண்டல் செய்து எடுத்துக்கொண்டு புற்றின் அருகே சென்று அமர்ந்துகொள்வாள். வேங்கடவன் வருவானா என்று காத்திருப்பாள். கிழவியின் வைராக்கியத்தைக் கண்டு மனமிரங்கிய பெருமாள் ஒருநாள், வயோதிக வேடம் கொண்டு புற்றிலிருந்து வெளியே வந்தார். கிழவியைக் காணாததுபோல நடந்தார். உடனே கிழவி ஓடிச்சென்று அவரை நிறுத்தினாள். அவரின் திவ்யமுக தரிசனத்திலேயே அவர் யார் என்று புரிந்துவிட்டது.

“ஐயா, உங்களைக் கண்டால் பசியால் வாட்டம் கொண்டவர்போல் இருக்கிறது. இந்தச் சுண்டலை உண்டு பசியாறுங்கள்” என்றாள்.
பெருமாளும் அவள் கையால் தந்த சுண்டலை சுவைத்து உண்டார். சுண்டலை உண்டபின்பு கிளம்பப் போன பெருமாளைக் கிழவி தடுத்து,

“சுண்டலுக்குப் பணம்? ” என்றாள்.

“என்னது பணமா, சொல்லவேயில்லையே… நானே கடன்பட்டுக் கல்யாணம் செய்து இன்றுவரை அதற்கு வட்டி கட்டிக்கொண்டு திரிகிறேன். என்னிடம் ஏது பணம்? ” என்று கேட்டார்.

கிழவியோ, பெருமாள் தன்னிடம் சிக்கிக்கொண்டதை அறிந்து, அய்யா, இந்த உலகத்தில் பணம் இல்லாது ஏதேனும் கிடைக்குமா?" என்று கேட்டாள். உடனே பெருமாளும்,சரி, நாளை வந்து தருகிறேன்” என்று சொல்லிப் போனார்.

மலையப்ப சாமி
மறுநாளிலிருந்து பெருமாள் வரவேயில்லை. ஆனால், கிழவிக்கு வந்தவர் பெருமாள் என்றும், அவர் தனக்குத் தரப்போகும் பணம் வைகுண்டப்பதவி என்பதையும் அறிந்திருந்தாள். ஆனால், இன்னும் திருமலையிலேயே வாசம்செய்யும் வேங்கடவனோ, அந்தக் கிழவிக்குத் தரவேண்டிய கடனுக்கு அஞ்சுபவர்போலவும், அதனால், அவளிருக்கும் திசைக்குச் செல்லும்போதெல்லாம், மறைந்து ஓடுவதுபோலவும் விளையாடிக்கொண்டிருந்தார்.

கிழவி ஒரு நாள் வைகுண்டப் பதவியையும் பெற்றுவிட்டாள். ஆனபோதும் பெருமாள் கிழவிக்கு அருள்பாலித்த திருவிளையாடலை நினைவுகூரும் விதமாக, இன்றும் வீதியுலா எழுந்தருளும்போது, கிழவி இருந்த இடத்தில் சத்தமின்றி கடன்பட்டவன்போல மறைந்து செல்வது தொடர்கிறது.

இந்தச் சம்பவத்தை பிரம்ம வசிஷ்ட பீட பரம்பரையைச் சேர்ந்த ஶ்ரீமான் அரங்கப் பிரகாச சுவாமிகள் கவியாக எழுதினார். அதில் கிழவி, தனக்கு வரவேண்டிய கடனுக்காக பெருமாளிடம் வாதம் செய்வதுபோல அந்தப் பாடல் அமைந்திருக்கும். அந்தப் பாடலை எம்.ஹரி பூஷணம் எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

“நாளை என்று நிதம் கெடுவுகள் சொல்லி நீ
வருடக் கணக்குகளாய் ஆக்கிவிட்டாய்
ஏழையாகிய என்னை ஆட்கொண்டருளாமலே
பாராமுகம் செய்வது நியாயமோ ” என்று கிழவி கேட்க

“அன்புடன் பக்தர்களை காத்து ரட்சித்ததுபோல
கலியுகமந்திய காலத்திலே
இன்பமாய் கொண்டாடி அசலையும் வட்டியையும்
காலந்தவறிடாமல் கொடுப்பேனம்மா”

என்று பெருமாள் பதில் சொல்வதுபோலக் கவி செய்திருக்கிறார் அரங்க பிரகாசர்.

திருப்பதியில் மட்டுமல்ல, சென்னையில் இருந்து திருப்பதி குடை செல்லும் நேரத்தில், யானைக் கவுனியிலும் இந்தத் திருவிளையாடல் நடைபெறுவதுண்டு. ஶ்ரீ வைகுண்டத்தை வெறுத்து புஷ்கரணித் தீரத்தில் வந்தமர்ந்த வேங்கடவன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கடன் பெற்றவன் என்றால் அதில் தவறில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe