
மதுரை திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி ரூ1500கோடி நிதி ஒதுக்கீடு செய்து வேகமாக பணிகள் நடந்து வரும் நிலையில் ராஜபாளையம் – செங்கோட்டை நான்கு வழி சாலை அமைக்கரூ.2,409 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம் – செங்கோட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2,409 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் துவங்க உள்ளது.
திருமங்கலம் – கொல்லம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக ராஜபாளையம் – செங்கோட்டை சாலை உள்ளது.
விருதுநகர் தென்காசி மாவட்டத்தில் தளவாய்புரம், சிவகிரி, வாசுதேவநல்லுார், புளியங்குடி, கடையநல்லுார், தென்காசி, இலஞ்சி வழியாக பயணிக்கும் இச்சாலை, 72 கி.மீ., நீளம் உடையது.
இச்சாலை, தற்போதைய வாகன போக்குவரத்துக்கு ஏற்ப அகலமாக இல்லை. பல இடங்களில் அபாய வளைவுகள் இருப்பதால், அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகின்றன. இச்சாலையை நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
நடப்பாண்டு பிப்., மாதம் மத்திய பட்ஜெட்டில், சாலை விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல், வனத்துறை அனுமதி உள்ளிட்ட பணிகளால், சாலை விரிவாக்கத்தை துவங்குவது காலதாமதமாகி வந்தது.
தற்போது, சாலை விரிவாக்க பணியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கி உள்ளது. ‘பாரத்மாலா பரியோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், இச்சாலை பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துஉள்ளது.
இரண்டு, ‘பேக்கேஜ்’களாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் பேக்கேஜ்க்கு, 1,090 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், 32 கி.மீ., சாலை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யப்படும்.
இரண்டாம் பேக்கேஜுக்கு, 1,319 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த நிதியில், 32 கி.மீ., சாலை, விரிவாக்கம் செய்யப்படும்.
இப்பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது. சாலை விரிவாக்க பணி டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ராஜபாளையம் – செங்கோட்டை இடையிலான பயண நேரம், 1 மணி 45 நிமிடங்களாக உள்ளது.
சாலை விரிவாக்க பணி முடிந்தால், பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளா புனலூர் அலிமுக்கு முதல் அச்சன் கோயில் செங்கோட்டை வரை சாலை அகலப் படுத்த கேரளா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த சாலை பணிகள் முடிந்தால் குற்றாலம் சபரிமலை மற்றும் கேரளா செல்லும் பயணிகள் பெரும் வரப் பிரசாதமாக இருக்கும்