கரூரில் பேருந்து கூண்டு கட்டும் தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் – தமிழர்களுடன் இணைந்து சரஸ்வதி, விநாயகர், முனீஸ்வரனை வழிபட்ட வட மாநில தொழிலாளர்கள்.
தொழில் நகரமான கரூரில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு, இன்று தொழிற்சாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கரூர் அடுத்த கோவை தேசிய நெடுஞ்சாலை பவுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பேருந்து கூண்டு கட்டும் தொழிற்சாலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு துாய்மைப்படுத்தி, சாணத்தால் மெழுகி, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்மாலைகளை சூட்டி அழகுபடுத்தினர்.
குறிப்பாக தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேங்காய், பழம், பொரி, சுண்டல் படையலிட்டு தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து புதிதாக கூண்டு கட்டவுள்ள பேருந்துகளின் எஞ்சின்களுக்கு தூப, தீபங்கள் காட்டப்பட்டது.
பேருந்து கூண்டு கட்டும் தொழிற்சாலையில் நடைபெற்ற ஆயுதபூஜையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழர்களுடன் இணைந்து வடமாநில தொழிலாளர்களும் விநாயகர் மற்றும் சரஸ்வதி தேவியுடன், முனீஸ்வரனையும் வழிபட்டனர்.