தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக இந்துக்களை ஒருங்கிணைக்கும் ஒற்றுமை மாநாடு வெற்றி பெற இந்துமுன்னணி வாழ்த்துவதக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
உலகம் முழுதும் உள்ள இந்து சமூகத்தை ஒன்றிணைக்க உலக இந்து மாநாடு நவம்பர் 24 25 26 ஆம் தேதிகளில் தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக மாநாட்டு ஏற்பாட்டாளர் சுவாமி விஞ்ஞானந்தா சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
இந்த மாநாட்டின் நோக்கமானது உலக இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்து மதத்திற்கான சவால்களை எதிர்கொள்ளவும்; செழுமை,அமைதி, நீதியை நிலைநாட்டவும்; இந்துக்களுக்கான பொது இலட்சியத்தை உருவாக்கி சாதிக்கும் மனநிலையை ஏற்படுத்துவதே எனக் கூறியுள்ளார்.
இதற்கான பணிகள் முழுமூச்சோடு நடந்து வருகிறது.இந்த மாநாட்டில் உலகளாவிய இந்துக்களின் பொருளாதார நிலைமை, இந்து ஊடகங்கள், இந்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் செயல்பாடு, இந்துக்களின் அரசியல் விழிப்புணர்வு, கல்வி குறித்த பார்வை மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடு என ஏழு விதமான இணை மாநாடுகளும் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.
தொடர்ந்து செய்தி ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள் இந்து மதத்திற்கு எதிரான போலி விவாதங்களை நடத்துகின்றன. இந்துக்களின் கருத்துரிமை பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. பொழுதுபோக்கு விஷயங்களில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பலர் செய்து வருகின்றனர். இது போன்ற விஷயங்களும் இந்த மாநாட்டில் அலசி ஆராயப்படுகிறது.
பண்பாடு கலாச்சாரத்தை காத்து வந்த சினிமாக்கள் இன்று இந்து மதத்திற்கு எதிரான மனநிலையோடு எடுக்கப்படுகிறது. இத்தகைய சினிமாக்களை மறு கட்டமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றியும் இந்த மாநாடு யோசிக்கும்.
உலகில் உள்ள இந்து கோவில்களை பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை இந்துக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இந்துக்கள் அதிகமாக வாழும் பாரத தேசத்தில் பல மாநிலங்களில் கோவில்கள் அரசின் கட்டுப்பாடில் இருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்கவும் மாற்று மதத்தினர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து கோவில் நிலங்களை மீட்கவும் இந்த மாநாடானது பயணிக்கும்.
உலகம் முழுவதும் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுக்கவும் உலகளாவிய இந்துக்களுக்கு பொதுவான பார்வை மற்றும் இலட்சியத்தை உருவாக்கவும் இந்த மாநாடு மகத்தான லட்சியத்தை முன்னெடுக்கிறது.
அனைத்து சமய மாநாட்டில் அன்று விவேகானந்தர் இந்து சமுதாயத்தின் ஆற்றல்களை பெருமைகளை உலகளாவிய பார்வைக்கு எடுத்துச் சென்றது போல் இந்த தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெறும் உலக இந்து சமய மாநாடு வெற்றிபெற இந்துக்கள் அனைவரும் பிரார்த்திப்போம். இந்துமுன்னனியின் வாழ்த்துக்கள்