
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளதால், அவர்களுக்கான தண்டனை என்ன என்பதை, இன்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய வசதியாக ஒரு மாதத்துக்கு தண்டனைக்காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 – 11ஆம் ஆண்டு திமுக., ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அதிமுக., ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2011 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. பொன்முடி மனைவி விசாலாட்சியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து 2016 ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து 2017ல் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அதில், ‘அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்து பதில் அளிக்க, இருவரும் 21ஆம் தேதி காலை 10:30க்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று காலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் ஆஜராகினர். அப்போது, நீதிபதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து தெரிவித்தார்.
அதில், மூன்று வருட சிறை தண்டனையும் ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது அவர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.