தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் டிச.28 இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71. முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் மூச்சு விட சிரமப் பட்டதால் அதற்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தேமுதிக தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.
அண்மைக்காலமாக பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேமுதிக. தரப்பில் உறுதி செய்து அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளித்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மியாட் மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதன் பின்னர் அவரது உடல் ஆம்புலன்சில் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
விஜயகாந்த் மரணச் செய்தி கேட்டு, சென்னையில் அவரது கட்சித் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்த் வீட்டின் முன்பு தேமுதிக., தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது அவருக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் இல்லத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.