- Ads -
Home அரசியல் திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

2024ஆம் ஆண்டுக்கான என்னுடைய முதலாவது பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதை நான் என் பாக்கியமாகவே கருதுகிறேன்.

#image_title
#image_title PM SPEECH AT TIRUCHIRAPALLI ON 2.1.24

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

தமிழ்நாட்டின் ஆளுநர் திரு. ஆர்.என். இரவி அவர்களே,

தமிழக முதல்வர் திரு. எம்.கே. ஸ்டாலின் அவர்களே, 

மத்தின அமைச்சரவையின் என் சகாவான திரு. ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே,

தமிழக அரசின் அமைச்சர்களே,

நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களே,

மேலும் தமிழ்நாட்டின் என் குடும்பச் சொந்தங்களே!!

வணக்கம்!!

எனது தமிழ் குடும்ப உறவுகளே,

முதற்கண் உங்கள் அனைவருக்கும் 2024க்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

2024ஆம் ஆண்டு அனைவருக்கும் அமைதியானதாகவும், வளமானதாகவும் இருக்கட்டும்!!

2024ஆம் ஆண்டுக்கான என்னுடைய முதலாவது பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதை நான் என் பாக்கியமாகவே கருதுகிறேன்.

சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான இன்றைய வளர்ச்சித் திட்டங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்தும்.

சாலைவழிகள், ரயில்பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி ஆற்றல் மற்றும் ஒரு பெட்ரோலியக் குழாய் இணைப்பு ஆகிய இந்தத் திட்டங்களுக்காக நான் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் பல திட்டங்கள் பயணிப்பதில் சுலபத்தன்மையை ஊக்கப்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

# # # # #

நண்பர்களே, தமிழ்நாட்டில் பலருக்கு 2023ஆம் ஆண்டின் கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன.

கனமழை காரணமாக நமது பல சககுடிமக்களை நாம் இழக்க வேண்டியிருந்தது.

சொத்துக்கள்-உடைமைகள் இழப்பும் கணிசமானதாக இருந்தது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்குள்ளே மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நெருக்கடியான வேளையிலே, மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு மக்களுக்குத் துணையாக நிற்கின்றது.

சாத்தியமான அனைத்து ஆதரவையும் மாநில அரசாங்கத்திற்கு நாங்கள் அளித்து வருகிறோம்.

இதோ சில நாட்கள் முன்பாகத் தான், நாம் திரு. விஜய்காந்த் அவர்களை நாம் இழந்திருக்கிறோம்.

அவர் சினிமா உலகின் கேப்டன் மட்டுமல்ல, அரசியலிலுமே அவர் கேப்டனாகவே இருந்து வந்திருக்கிறார்.

திரைப்படங்களில் அவருடைய செயல்பாடு வாயிலாக அவர் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

ஒரு அரசியல்வாதி என்ற முறையில், அவர் அனைத்திற்கும் மேலாக தேசிய நலனுக்கே முன்னுரிமை அளித்து வந்திருக்கிறார்.

அவருக்கு நான், என்னுடைய அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

அவருடைய குடும்பத்துக்கும், அபிமானிகளுக்கும் நான் என் ஆழமான இரங்கல்களை உரித்தாக்குகிறேன்.

நண்பர்களே,

இன்று, நான் இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் வேளையிலே, நான் தமிழ்நாட்டின் மேலும் ஒரு மைந்தரான முனைவர். எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களையும் நினைவு கூர்கிறேன்.  

அவர் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக, ஒரு முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்.

கடந்த ஆண்டிலே நாம் அவரையும் இழந்திருக்கிறோம்.

# # # # # 

என் தமிழ் குடும்ப உறவுகளே,

சுதந்திரத்தின் அமுதக்காலம், அதாவது வரவிருக்கும் 25 ஆண்டுக்காலகட்டத்திலே, பாரதத்தை வளர்ந்த தேசமாக நாம் ஆக்க வேண்டும்.

நான் வளர்ச்சியடைந்த பாரதம் என்று கூறும் போது, இதிலே பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் என்ற இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.

ALSO READ:  தீபாவளி மலர்கள்... ஓர் அனுபவம்!

அந்த வகையிலே, தமிழ்நாட்டிற்கு இதிலே சிறப்பானதொரு பங்களிப்பை என்னால் காண முடிகிறது.

பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சார மரபின் பிரதிபலிப்புத் தான் தமிழ்நாடு.

தமிழ்நாட்டின் வசம் தமிழ் மொழி மற்றும் ஞானம் என்ற பழைமையான கருவூலம் இருக்கிறது.

புனிதர் திருவள்ளுவர் தொடங்கி, சுப்பிரமணிய பாரதி வரை பலப்பல தூயோர், ஞானிகள் ஆகியோர், அற்புதமான இலக்கியங்களைப் படைத்தளித்திருக்கிறார்கள்.

சி.வி. இராமன் தொடங்கி இன்று வரை, அற்புதமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூளைச்சக்திக்குச் சொந்தக்காரர்கள் பலரை இந்த மண் உருவாக்கியளித்திருக்கிறது.

ஆகையால் தான், நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் ஒரு புதிய சக்தியை எனக்குள்ளே நிரம்பிக் கொண்டு செல்கிறேன்.

# # # # # 

எனக்குப் பிரியமான குடும்ப உறுப்பினர்களே,

திருச்சிராப்பள்ளி நகரம் என்று சொன்னாலே, வளமான வரலாற்றுக்கான சான்றுகள் அங்கிங்கெனாதபடி, எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடக்கிறது.

இங்கே பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் போன்ற பல்வேறு அரசவம்சங்களின் நல்லாட்சி மாதிரிகள் கண்கூடாகக் காணக் கிடைக்கின்றன.

எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு, அவர்களிடத்திலே எனக்கு மிக நெருக்கமான உறவுகள் உண்டு.  இவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாரம் பற்றி வெகுவாகக் கற்கக்கூடிய நல்வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது.  

உலகின் எந்த இடத்திற்கு நான் சென்றாலும் கூட, தமிழ்நாட்டைப் பற்றிப் பேசாமல், தமிழ்மொழியை மனதாரப் புகழாமல் என்னால் இருக்க முடிவதில்லை.

நண்பர்களே,

தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் கலாச்சார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும், பரவ வேண்டும் என்பதே என்னுடைய முயற்சியாக இருக்கிறது.

தில்லியின் நாடாளுமன்றப் புதிய கட்டிடத்தில், புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.

தமிழ் பாரம்பரியமானது தேசத்திற்கு அளித்திருக்கும் நல்லாளுகை மாதிரியிலிருந்து, கருத்தூக்கம் பெறும் முயற்சியே இது.

காசி தமிழ்சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்சங்கமம் போன்ற இயக்கங்களின் பொருளும் கூட இது தான்.

இந்த இயக்கங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதிலும் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் தொடர்பான உற்சாகம் அதிகரித்திருக்கிறது.

# # # # #

என் அன்புநிறை குடும்ப சகோதர சகோதரிகளே,

கடந்த பத்தாண்டுகளில், நவீன கட்டமைப்பின் மீது மிகப்பெரிய முதலீட்டை  பாரதம் புரிந்திருக்கிறது.

சாலைவழி, ரயில் பாதை, துறைமுகம், விமான நிலையங்கள், ஏழைகளுக்கான வீட்டுவசதிகள் அல்லது மருத்துவமனைகள் என, இன்று பாரதம் கட்டுமானம் மற்றும் சமூகக் கட்டமைப்பின் மீது இதுவரை காணாத முதலீடுகளைச் செய்து வருகிறது.   

இன்று பாரதம் உலகின் தலைசிறந்த 5 பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

உலகின் ஒரு புதிய நம்பிக்கைத் தாரகையாக, இன்று பாரதம் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

பெரியபெரிய முதலீட்டாளர்கள் எல்லாம் இன்று பாரதத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.  

இதன் நேரடி ஆதாயம், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் கிடைத்து வருகிறது.

தமிழ்நாடு இந்தியாவில் தயாரிப்போம், மேக் இன் இண்டியாவின் மிகப்பெரிய ப்ராண்ட் அம்பாஸடராக ஆகி வருகிறது.

ALSO READ:  பிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயசந்திரன் காலமானார்!

# # # # # 

என் நெஞ்சம்நிறை குடும்ப உறவுகளே,

மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை அடிநாதமாகக் கொண்டு செயல்படுகிறது.

கடந்த ஓராண்டிலே, மத்திய அரசாங்கத்தின் 40ற்கும் மேற்பட்ட பல்வேறு அமைச்சர்கள், 400க்கும் மேற்பட்ட முறை தமிழ்நாட்டின் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு விரைவான வளர்ச்சியை அடையும் போது, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும்.

இணைப்பு கூட, முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊடகமாக விளங்குகிறது.

இதனால் வியாபாரமும் வணிகமும் பெருகுவது மட்டுமல்ல, மக்களுக்கு வசதிவாய்ப்புகளும் ஏற்படுகின்றன.

வளர்ச்சியின் இந்த உணர்வைத் தான் இன்று, இங்கே, திருச்சிராப்பள்ளியிலே நாம்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருச்சி சர்வதேச விமானநிலையத்தின் புதிய முனையம் காரணமாக, இந்த இடத்தின் இணைப்புத்திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும்.

இங்கிருந்து கிழக்காசியா, மத்திய ஆசியா மேலும், உள்நாட்டின் – உலக நாடுகளின் பிற பாகங்கள் வரை, திருச்சியின் இணைப்பு, மேலும் வலுவானதாக ஆகும்.

இதனால் திருச்சியைத் தவிர, அண்டைப்புறத்தில் இருக்கும் மிகப்பெரிய பகுதியில் முதலீடுகளும், புதிய வணிகத்திற்கான புதிய சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படும்.

இங்கே கல்வி, உடல்நலம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் மிகப்பெரிய பலம் கூட்டப்படும்.

இங்கே விமானநிலையத்தின் திறன் அதிகரிப்பதோடு, இதை உயர்த்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் உயர்த்தப்பட்ட சாலையாலும் கூட மிகப்பெரிய வசதி உண்டாகும்.

திருச்சி விமானநிலையம், உள்ளூர் கலை-கலாச்சாரம் வாயிலாக, தமிழ் பாரம்பரியம் பற்றிய பெருமைமிகு விஷயங்களை உலகினுக்குப் பறைசாற்றும் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.

# # # # # 

என் உயிரினும் மேலான என் குடும்பச் சொந்தங்களே,

இன்று தமிழ்நாட்டின் ரயில் இணைப்புத்திறனை மேலும் வலுவானதாக ஆக்க, 5 புதிய திட்டங்கள் தொடங்கப்பட இருக்கின்றன.

இவற்றால் பயணம் மற்றும் போக்குவரத்து எளிதாக ஆகும் என்பது ஒரு புறம்;  மற்றொரு புறத்தில் இந்தப் பகுதியில் தொழில்களுக்கும், மின்சார உற்பத்திக்கும் கூட பெரும் வலு கூட்டப்படும்.

இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் மக்கள்நலத் திட்டங்கள், ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, இராமேஸ்வரம், வேலூர் போன்ற மகத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கின்றன. 

இவை நமது நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவின் பெரிய மையங்கள்.

இவற்றால் எளிய சாமான்யர்களோடு கூடவே, புனிதப்பயணங்களை மேற்கொள்வோருக்கும் கூட மிகப்பெரிய வசதிகள் உண்டாகும்.

# # # # # 

என் நெஞ்சுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களே,

கடந்த பத்தாண்டுகளிலே மத்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய கவனம், துறைமுகம் வழிநடத்தும்க் முன்னேற்றம் மீது இருந்து வந்திருக்கிறது.

நாம் கடற்கரையோர கட்டமைப்பின் முன்னேற்றம் மற்றும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கிலே பல பணிகளை ஆற்றியிருக்கிறோம்.

சுதந்திரம் கிடைத்த பிறகு முதன்முறையாக, மீன்வளத்திற்கென பிரத்யேகமான தனியொரு அமைச்சகத்தை ஏற்படுத்தி, அதற்கென பிரத்யேகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

முதன்முறையாக, மீனவர்களுக்கும் கூட, விவசாயிகள் பற்று அட்டை வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.

மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, நவீனமயமாக்கல் விஷயத்திலும் கூட அரசாங்கம் உதவிகள் செய்து வருகின்றது.

பிரதம மந்திரி மீன்வளத் திட்டத்தால் மீன்பிடித் தொழிலோடு இணைந்திருக்கும் நண்பர்களுக்கு மிகப்பெரிய உதவி கிடைத்து வருகிறது.

ALSO READ:  அய்யூர் வடக்கு தெரு மதுரைவீரன், நைனார் சாமி கோவில் கும்பாபிஷேக விழா!

# # # # #

என் உயிரினும் மேலான என் குடும்ப பந்தங்களே,

சாகர்மாலா திட்டத்தால் இன்று தமிழ்நாடு உட்பட தேசத்தின் பல்வேறு துறைமுகங்கள், நல்ல சாலைகளோடு இணைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பெருமுயற்சிகளால் இன்று பாரதத்தின் துறைமுகத் திறனிலும், கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து திரும்பிச் செல்லும் நேர அளவிலும் பெரிய மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது.

காமராஜர் துறைமுகமும் கூட இன்று தேசத்தின் மிக விரைவாக மேம்பாடு அடைந்து வரும் துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்தத் துறைமுகத்தின் கொள்திறனை, நமது அரசாங்கம் கிட்டத்தட்ட 2 மடங்கு வரை அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்போது பொதுவான சரக்கு பர்த் 2 மற்றும் கேப்பிடல் ட்ரெட்ஜிங் 5ஆவது கட்டத்தின் தொடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் ஆகவிருக்கும் ஏற்றுமதி-இறக்குமதிக்குப் புதிய சக்தி கிடைக்கும்.

சிறப்பான வகையில் இது வாகனத் துறையில் தமிழ்நாட்டின் திறன்கள்-திறமைகளை விரிவாக்கும்.

அணுசக்தி உலை மற்றும் எரிவாயுக் குழாய் மூலமாகவும் கூட தமிழ்நாட்டின் தொழில்சாலைகளுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கல்களுக்கு புதிய பலம் கிடைக்கும்.

# # # # # 

எனதருமை குடும்பச் சொந்தங்களே,

இன்று மத்திய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத்தில் வரலாறுகாணாத நிதியைச் செலவு செய்து வருகிறது.

2014ற்கு முன்பான பத்தாண்டுகளில் மத்திய அரசு தரப்பிலிருந்து மாநிலங்களுக்கு சுமார் 30 இலட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.

நம்முடைய அரசாங்கமானது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு 120 இலட்சம் கோடி ரூபாயை அளித்திருக்கிறது.

2014க்கு முன்பான பத்தாண்டுகளில் எத்தனை நிதியை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றதோ, அதை விட இரண்டரை மடங்கிற்கும் அதிகமான நிதியை நம்முடைய மத்திய அரசு அளித்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கும் பொருட்டு மத்திய அரசு முன்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது.

இரயில்வே துறையை நவீனமயமாக்க, நமது அரசாங்கம், முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிக அளவு செலவு செய்து வருகிறது.

இன்று தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகின்றன, இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைத்து வருகின்றது.

நம்முடைய அரசாங்கம், கான்கிரீட் வீடுகள், கழிப்பறை வசதிகள், குடிநீர் இணைப்புகள், எரிவாயு இணைப்புகள் போன்ற பல வசதிகளை நம் தமிழ் சொந்தங்களுக்குச் செய்து வருகிறது.

# # # # # 

என் பேரன்புடைய குடும்பத்தாரே,

வளர்ச்சியடைந்த பாரதத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று சொன்னால், அனைவரின் முயற்சியும் அவசியமானது.

தமிழ்நாட்டு மக்களின், தமிழ் இளைஞர்களின் திறன்கள்-திறமைகளின் மீது அபாரமான, அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

தமிழ் இளைஞர்களிடத்திலே ஒரு புதிய எண்ணம், புதிய உற்சாகத்தின் உதயத்தை என்னால் தெளிவாகக் காண முடிகிறது.

இந்த உற்சாகம் தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் சக்தியாக ஆகும்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.

பாரத் மாதா கீ ஜய்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version