தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முடக்க சதி- முதலமைச்சரின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி போரட்டத்தை உதயகுமார் நடத்திய போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் போராட்டங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்று காவல்துறையினரின் துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தினார்.
இந்த அணுகுமுறை போராட்டக்காரர்களுக்கு சாதமாக அமைந்ததால் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு களேபரமானது ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் அதிமுக, திமுக இரண்டு ஆட்சிக் காலங்களிலும் வழக்குகளை ரத்து செய்ததன் காரணமாக தான் இப்போது மீண்டும் மக்களை தூண்டி போராட்டம் நடத்த சுப.உதயகுமார் திட்டமிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து சில அமைப்புகள் அன்னிய நாடுகளின் துணையுடன் மக்களை தூண்டி போராட்டம் நடத்தி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடத்தி அந்த ஆலை மூடப்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர் மேலும் நாட்டின் காப்பர் தேவைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது குலசேகரன்பட்டினம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்கள் காரணமாக பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீட்டு செய்ய முன்வராமல் வேறு மாநிலங்களில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழக அரசு தொழில் வளர்ச்சியை பெருக்க உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ள நிலையில் இது போன்ற போராட்டங்களினால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் இன்றியமையாத ஒன்று மேலும் வளர்ந்த நாடுகளை போன்று போக்குவரத்து, ரயில்வே என அனைத்து துறைகளிலும் மின்சார தேவை அதிகரித்து வருகிறது எனவே மின்சார தேவைக்காக புதிய திட்டங்களும் அவசியமாகிறது.
எனவே உலைகள் குறித்த மக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் மக்கள் மத்தியில் அணு உலைகள் குறித்து தவறான கருத்துக்களை பரப்பி போரட்டத்தை முன்னெடுக்கும் சுப.உதயகுமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.