
‛‛எம்ஜிஆர்., குறித்து 2ஜி ஊழலில் சிறை சென்ற திமுக., எம்பி., ஆ.ராசா கூறிய ‘லூஸு’ விமர்சனம் சமூகத் தளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்று வந்த நிலையில், இரு நாட்கள் தாமதமாக, ‘ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது” என அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஒரு லூஸு என மிகவும் தரம் தாழ்ந்த வகையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் திமுக.,வின் 2ஜி ஊழல் புகழ் ஆ.ராசா. அவரது பேச்சு சமூகத் தளங்களில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது. குறிப்பாக, அதிமுக.,வினர் மட்டுமல்லாது, பாஜக.,வைச் சேர்ந்தவர்களும், எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ஆ.ராசாவுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, கருத்துகளைப் பகிர்ந்தனர்.
ஆனால் இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, கண்டனக் கூட்டங்களை நடத்தி, மிகப் பெரும் அளவில் தங்களை திமுக.,வின் முழுமுதல் எதிர்ப்பாளர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டிய, எம்.ஜி.ஆரை., வைத்து அரசியல் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கக் கூடிய அதிமுக.,வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மிகவும் சாவகாசமாக வெறும் ஒரு சாதாரண கண்டனச் செய்தியை மட்டும் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டார். இது எம்.ஜி.ஆர். ரசிகர்களை மேலும் கோபத்தில் தள்ளி விட்டுள்ளது.
ஊழல்வாதிகள் என்பது குறித்து தனது பேச்சினூடே ஜெயலலிதாவையும் போகிறபோக்கில் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை சொன்னதற்காக, கூட்டணியையே முறித்துக் கொண்டு அரசியல் செய்த அதிமுக.,வினர், இப்போது தங்களது பரமை வைரிகள் என்று சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கக் கூடிய திமுக.,வினரின் எம்.ஜி.ஆர்., எதிர்ப்புப் பேச்சுகளை வாய் மூடி மௌனியாகக் கேட்டுக் கொண்டு, ‘பல்லு படாமல் சொல்லு சுடாமல் மெல்லக் கடிதோச்சி மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றனர் என்று அதே எக்ஸ் தளப் பக்கங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இதன் மூலம், திமுக.,வின் முழு எதிர்ப்பாளர்கள் பாஜக.,வினர் தானே தவிர, அதிமுக., அல்ல என்றும், திமுக.,வும் அதிமுக.,வும் பங்காளிகள்தான் என்றும் நிரூபிக்கப் பட்டிருப்பதாக கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
திமுகவினையும் தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் எதிர்த்து முழுமூச்சாக அரசியல் செய்ய வேண்டிய எடப்பாடி பழனிசாமி, வாய் மூடி மௌனியாக இருக்கும் இடம் தெரியாமல் சென்று கொண்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உக்கிரமான அரசியலை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்ற கேள்வியை வேறு எழுப்பினார். ஆனால் இன்று ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் எதுவும் செய்யாமல், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அவியல் கிண்டி கொண்டிருப்பதைப் பார்த்து தமிழக வாக்காளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எம்ஜிஆர்., குறித்து பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்தும், அதற்கு எடப்பாடி பழனிசாமி சமூகத் தளத்தில் தெரிவித்த சாதாரண கண்டனமும்…
எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது…
இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் , என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற மாண்புமிகு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை, அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த திமுக அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தரம் தாழாது .
இந்த விடியா திமுக ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , கழகத்தின் இதயதெய்வங்களான புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.
வரலாறு நெடுக எங்கள் இதயதெய்வங்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன. அதே போல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். “கல்லை வடித்தால் அது வெறும் சிலை- அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்”
ஏற்கெனவே, இதே ஆண்டிமுத்து ராசா எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து மிக மிக மோசமான முறையில் அறுவெறுப்பான அவதூறுக் கருத்துகளைப் பேசிய போதும், அதைக் கேட்டுக் கொண்டு ‘இது நல்லது இல்லீங்க’ என்ற அளவில் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி!