
பெரும் விளம்பரங்களுடன் ஆர்பாட்டமாகத் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இப்போது பொது மக்களின் கண்ணீரை பெருக்கி விட்டு ஆட்சியாளர்களின் காலை வாரிவிட்டுள்ளது.
1999ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால் கால்கோள் விழா நடத்தப்பட்டு பின்னாளில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது கோயம்பேடு பேருந்து நிலையம். அதற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டினார் ஜெயலலிதா. பேருந்து நிலையத்தில் முகப்பிலேயே ஜெயலலிதாவின் பெயர் மிகப்பெரியதாக இடம் பெற்றது.
அதிமுக ஆட்சி காலத்தில் கோயம்பேடுக்கு அடுத்து நகரின் போக்குவரத்து சேவையை கருத்தில் கொண்டு மிகப் பெரிதாக சென்னையில் முகப்பு வாயிலாக கருதப்படும் வண்டலூரை அடுத்த களாம்பாக்கத்தில் ஒரு பேருந்து நிலையத்துக்கு. அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது.
இதனால், சென்னைக்கு மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைத்து அவரது தந்தை கருணாநிதியின் பெயரைச் சூட்டினார்.
தொடர்ந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்தே இயங்க ஆரம்பித்தது. இதுதான் தற்போது மக்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஊருக்கு போக கிளம்பும் மக்கள் பஸ் ஸ்டாண்டுக்கு போவதே ஊருக்கு போவது போல் இருக்கே என புலம்பும் நிலைக்கு வந்தனர். இது குறித்த கேலி கிண்டல்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பெரிதாக பரவ தொடங்கின.
இப்படி பல அதிருப்திகள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிளாம்பாக்கத்தில் சரிவர பேருந்துகள் இயங்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும் சனி ஞாயிறுகளிலும் பேருந்துகள் மிக குறைவாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதிலும் இரவு நேரத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல போதிய பஸ் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை. அதேபோல் பஸ் ஸ்டாண்ட் அருகில் டீக்கடை, ஹோட்டல் என எந்த அடிப்படை வசதியும் இல்லை என்ற புகார்களும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. மேலும், 8 மணி நேரத்திற்கும் மேலாக பஸ்ஸுக்காக காத்திருக்கிறோம் என பெண்கள் புலம்புவதையும் பார்க்க முடிகிறது.
2000 பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பஸ் தான் வருகிறது என மக்கள் கொதித்துப் போய் பேசும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. இப்படி பிரச்சனை பெரிதானதை அடுத்து தற்போது போலீசார் மக்களை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சரும் இதற்கான விளக்கத்தை கொடுத்து வருகிறார். ஆனாலும் சமாதானம் அடையாத மக்கள் இந்த பஸ் ஸ்டாண்ட் எங்களுக்கு வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்கள், ஆம்னி பஸ் ஓட்டுநர்களுக்கு குளியல் அறை தங்குமிட வசதிகள் ஏதும் செய்துதரப்படவில்லை என்பதால், பிளாட்பாரத்தில் வைத்தே குளிப்பதால், அங்கே தண்ணீர் ஓடி தேங்கி சுகாதாரக் குறைவு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு எந்த வித வசதியும் இங்கே செய்து தரப்படவில்லை என்று ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வார இறுதியில் கூட்டத்துக்குத் தக்க பேருந்து இல்லை…
வார இறுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்வோருக்கு போதுமான பேருந்துகள் இல்லாததாலும், கிளாம்பாக்கத்திற்கு இணைப்பு பேருந்துகள் பற்றாக்குறையாலும் இரண்டாவது நாளாக நேற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணியர் அவதியடைந்தனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் வர போதிய இணைப்பு பேருந்துகள் இல்லாதது, உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தாதது குறித்து, பயணியர் புலம்பி வருகின்றனர்.
வார இறுதியில் தென்மாவட்ட பயணியர் வசதி கருதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். கடந்த வெள்ளி அன்று, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல, கிளாம்பாக்கத்திற்கு வந்த பயணியர், போதிய பேருந்துகள் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தனர். இதனால் அதிருப்தியடைந்த 200க்கும் மேற்பட்ட பயணியர், பேருந்து நிலையத்தில் இருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால், திடீரென பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார், பயணியருடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
சொந்த ஊர் செல்ல வந்தோர், போதிய பேருந்துகள் இல்லாததால், பேருந்து நிலைய நடைமேடையில் இரவு முழுதும் உறங்கி, அதிகாலையில் பேருந்து பிடித்து சென்றனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இது குறித்துக் கூறியபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி அரசு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், மதுராந்தகம் அருகே, வெள்ளி அன்று இரவு திடீரென ஏற்பட்ட விபத்தால், 2 கி.மீ., துாரம் வாகன போக்குவரத்து முடங்கியது. கிளாம்பாக்கம் வர வேண்டிய பேருந்துகள், அந்த நெரிசலில் சிக்கி, ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன. இதனால், கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 488 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தவிர, தினமும் இயக்கப்படும் 1,161 அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டன என்று கூறினார்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்தப் பிரச்னை குறித்துக் குறிப்பிட்டபோது, வெள்ளி அன்று, வார இறுதி நாட்கள் என்பதால், இரவு 10:30 மணிக்கு மேல், அதிகமான பயணியர் வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அவர்களின் தேவைக்காக, கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்பட்டன. தை அமாவாசையை முன்னிட்டு, மேல்மலையனுார் மற்றும் திருவண்ணாமலைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. எதிர்பார்க்காத வகையில் அதிகளவில் பயணியர் வந்ததால், பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், எங்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருக்கைகளை சேதப்படுத்தினர். அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பணிபுரிவதற்கு அச்சமாக உள்ளது… என்று கூறினார்கள்.
எனினும் வெள்ளி அன்று நடந்த சம்பவத்திலும் பாடம் கற்காத அதிகாரிகளால், போதிய பேருந்துகள் கிடைக்காமல் சனி ஞாயிறு அன்றும், பயணியர் பெரிதும் அவதியடைந்தனர். குறிப்பாக, திருவண்ணாமலை, செஞ்சி, விழுப்புரம், திருச்சி, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு, கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால், 700க்கும் மேற்பட்ட பயணியர் அவதிஅடைந்தனர். நள்ளிரவு வரை நீண்ட நேரமாக பேருந்துகளுக்காக காத்திருந்தனர். மீண்டும் மறியல் போன்ற போராட்டங்களை தடுக்கும் வகையில், நேற்று 80க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்பெல்லாம், மாநகர போக்குவரத்து கழகத்தில் முதல் ஷிப்ட் காலை 4:00 மணிக்கும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 2:00 மணிக்கும் துவங்கும். ஆனால், கிளாம்பாக்கத்தில் தற்போது நிலவி வரும் பயணியர் புகாரால், அதிகாலை 3:00 மணி முதலே மாநகர பேருந்துகளின் சேவை துவங்கப்படுகிறது. இதனால், ஆட்கள் பற்றாக்குறை பிரச்னை ஏற்படுகிறது. கிளாம்பாக்கத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கென திறக்கப்பட்ட பிரத்யேக ஓய்வு அறைகள், சில நாட்களாக, முன்னறிவிப்பு இன்றி மூடியுள்ளனர். வேறு வழியின்றி பேருந்துகளின் இருக்கைகளிலேயே, துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்று, போக்குவரத்து ஊழியர்கள் குறை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியை ஏற்றவும், இறக்கவும் ஆம்னி பேருந்துகளுக்கு, கடந்த மாதம் 24ம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், கோயம்பேடு, போரூர், சூரப்பட்டு பகுதிகளில் பயணியரை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு இடைக்கால அனுமதி வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், நேற்று முதல் கோயம்பேடில் இருந்து வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான முழுமையான வசதிகள் ஏற்படுத்தும் வரை, கோயம்பேடில் இருந்து புறப்பட்டு, போரூர், சூரப்பட்டு வழியாக பயணியரை ஏற்றி, இறக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால், பல ஆயிரக்கணக்கான பயணியர், 1,000த்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் நேற்று பயணம் செய்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கும்போது, முன்பதிவு 60 சதவீதம் தான் இருந்தது. கோயம்பேடில் இருந்து ஆம்னி பேருந்துகளை மீண்டும் இயக்குவதால், முன்பதிவு 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அவதிதான்: எடப்பாடி பழனிசாமி
கிளாம்பாக்கத்தில் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கருணாநிதி பேருந்து நிலையம் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டி, அவசரகதியில் தி.மு.க., அரசு திறந்தது. மேலும், சென்னைவாசிகளை அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதையே பெரும் சிரமமாக கருத வைத்துவிட்டது. இரவு, குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் சென்ற பயணியர், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், நடைமேடைகளில் படுத்து உறங்கும் அவல நிலை ஏற்பட்டது. மக்கள், ஓரளவுக்குதான் பொறுமை காப்பர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் மாநகர பேருந்துகளை இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும், உடனடியாக ஏற்படுத்த வேண்டும். – என்று எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க., பொதுச்செயலர்) கோரிக்கை வைத்தார்.
மக்கள் போராட்டம் வெடிக்கும்: அண்ணாமலை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து 40 நாட்களாகியும், பயணியர் எதிர்கொள்ளும் பிரச்னை தினமும் தொடர்கிறது.வெள்ளிக்கிழமை இரவு, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல, போதிய பேருந்துகளை இயக்காததால், நள்ளிரவில் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளை சிறைபிடித்தும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்தி தங்கள் நிர்வாக தோல்வியை ஒப்புக்கொண்டு, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில், தி.மு.க., அரசு ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுதாக தயாராகும் வரை, கோயம்பேடில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும். மக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால் அவர்களின் போராட்டம், சென்னை முழுக்க பெருமளவில் வெடிக்கும் என்று தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.