
பல்லடம் பொதுக்கூட்டம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் பாதை யாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, இன்றுதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் யாத்திரையை முடித்தார். இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய இணையமைச்சர் எல்முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவின் துவக்கத்தில் பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு நினைவு பரிசும், 65 கிலோ எடையுள்ள ஈரோடு மஞ்சள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக.,மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரதமர் வருவதற்கு சற்று தாமதம் ஆனதால், நேரமின்மை கருதி சுருக்கமாகப் பேசுகிறேன் என்று 4 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்தார். அவரை முதுகில் தட்டிப் பாராட்டினார் பிரதமர் மோடி.
அண்ணாமலை பேசிய போது…
”இது யாத்திரை நிறைவு விழாவே தவிர, 39 எம்.பி.,க்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை. இன்னும் 60 நாட்களில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்க உள்ளார். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும். இன்று யாத்திரை நிறைவு விழாவே தவிர, 39 எம்.பி.,க்களை பார்லிமென்ட்க்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வு இல்லை.
காங்கிரஸ் தடை செய்த ஜல்லிக்கட்டு, இன்றைக்கு நடைபெறுவதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி மட்டுமே. அதன் காரணமாக ஜல்லிக்கட்டு நினைவுப்பரிசும், பாரம்பரியமிக்க மஞ்சளும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டன. 2014, 2019ல் செய்த தவறை தமிழக மக்கள் இந்த முறை செய்ய மாட்டார்கள். பொய் பிரசாரங்களை ஏற்காமல், பிரதமர் மோடியை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பல்லடம் கூட்டம் தமிழக பாஜ.,விற்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பேசினார் அண்ணாம்னலை.