தமிழகத்தில் ஏப்.19 அன்று நடைபெற்ற முதல்கட்ட மக்களவைக்கான தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தில் 3 முறை மாற்றம் செய்யப்பட்டது அரசியல் கட்சியினரிடமும் ஊடகத்தினரிடமும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தமிழக அரசுப் பணியாளர்கள் மீது பலரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் திமுக.,வுக்கு ஊழியம் பார்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் குளறுபடிக்கு, ‘ஓட்டுப்பதிவு சதவீதத்தை ஒருசிலரே செயலியில் பதிவிட்டதுதான் காரணம்’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புதிதாக ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தேர்தல் முடிந்த அதே நாள் மாலை, முதலில் 72 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். இதனால் வாக்குகள் அதிகம் பதிவானதாக ஊடகங்களில் விவாதங்கள் களை கட்டின. இதனால் அது மாநிலத்தில் ஆளும் கட்சி கூட்டணிக்கு பாதகமாக இருக்கக் கூடும் என்றும், மாநில ஆளும் கட்சியான திமுக.,வுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அதிக அளவில் விழுந்ததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் 69.46 சதவீதம் ஓட்டுகளே பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இரு வேறு தகவல்களால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பம் அடங்குவதற்குள் ஏப்.21 நேற்று மதியம், 69.72 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக 3வது முறையாக தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்தது. பொதுவாக, முதலில் அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தில் இருந்து 2 சதவீதத்துக்கும் குறைவாகவே பிழைகள் இருக்கும் என்பது நியதி. அவ்வாறு 2 சதத்துக்கும் அதிகமாக பிழை இருக்குமானால் வாக்குப் பதிவு குளறுபடியானதாகவே பார்க்கப்படும்.
இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவில் இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறியவை: வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. செயலியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இதனால் சிலர் மட்டுமே அப்டேட் செய்தனர். தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தகவல் வர தாமதமாகும் என்பதால் செயலி மூலம் கிடைத்த தகவல்களை ஊடகங்களுக்கு அப்டேட் செய்தோம்… என்று சத்ய பிரதா சாஹூ விளக்கமளித்தார்.
அப்படி என்றால், செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால், அது முதலில் குறைவாகவும், செயலியில் அனைத்து வாக்குச்சாவடி தகவல்களும் அப்டேட் செய்யப்பட்ட பின்னர் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தும் இருப்பதுதானே நியாயமானது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
தேர்தல் முடியும் நேரத்தில் மாலை 5 முதல் 6 மணி வரையிலாக கடைசி ஒரு மணி நேரத்தில், அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியது. திமுக.,வினர் கள்ள வாக்குகள் பதிவு செய்ததாக பலரும் சந்தேகம் எழுப்பினர். இதனால் வாக்குப் பதிவு சதவீதம் உயர்ந்ததாகவும் கூறப்பட்டது.
தமிழக வாக்குப்பதிவு 69.72% 3வது முறையாக மாறியது!
3வது முறையாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20%, குறைந்தபட்சம் மத்திய சென்னையில்53.96 % வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்கு சதவீதம் தொகுதி வாரியாக…
தொகுதி- வாக்குப்பதிவு சதவீதம்
* திருவள்ளூர் – 68.59
* வடசென்னை – 60.11
* தென்சென்னை- 54.17
* மத்திய சென்னை – 53.96
* ஸ்ரீபெரும்புதூர் – 60.25
* காஞ்சிபுரம்- 71.68
* அரக்கோணம் – 74.19
* வேலூர் – 73.53
* கிருஷ்ணகிரி – 71.50
* தர்மபுரி – 81.20
* திருவண்ணாமலை – 73.24
* ஆரணி – 75.76
* விழுப்புரம் – 76.52
* கள்ளக்குறிச்சி – 79.21
* சேலம் – 78.16
* நாமக்கல் – 78.21
* ஈரோடு – 70.59
* திருப்பூர் – 70.62
* நீலகிரி – 70.95
* கோவை – 64.89
* பொள்ளாச்சி – 70.41
* திண்டுக்கல் – 71.14
* கரூர் – 78.70
* திருச்சி – 67.51
* பெரம்பலூர் – 77.43
* கடலூர் – 72.57
* சிதம்பரம் – 76.37
* மயிலாடுதுறை – 70.09
* நாகப்பட்டினம் – 71.94
* தஞ்சாவூர் – 68.27
* சிவகங்கை – 64.26
* மதுரை – 62.04
* தேனி – 69.84
* விருதுநகர்- 70.22
* ராமநாதபுரம் – 68.19
* துாத்துக்குடி – 66.88
* தென்காசி – 67.65
* திருநெல்வேலி – 64.10
*கன்னியாகுமரி- 65.44