மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயக்கப்பட்ட நெல்லை – கொல்லம் – நெல்லை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
வியாழன் நேற்று (20/06/24) செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரிய தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், பிற உயர் அதிகாரிகள், மதுரை கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் தென்காசி நெல்லை கொல்லம் மாவேலிக்கரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இன்று அனுப்பிய ஈ-மெயில் கடிதத்தில் கூறியிருப்பதாவது-
*மீட்டர் கேஜ் ரயில்கள் ஓடிய நேரத்தில் நெல்லை – கொல்லம் இடையே அம்பை பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை ஆரியங்காவு தென்மலை புனலூர் கொட்டாரக்கரை வழியாக காலையிலும் மாலையிலும் கொல்லம் நெல்லை இரு இடங்களிலிருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டன.இப்பாதை 2018ம் ஆண்டு பிராட் கேஜ் ஆன பிறகு இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை.
இதனால் திருநெல்வேலிக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் கேரள மக்கள், இரு மாநில மாணவர்கள்,வணிகர்கள் தனியார் மற்றும் அரசு , வங்கி ஊழியர்கள் ,பால் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகள், குண்டாறு ,அடவிநயனார் அணைகள்,பாபனாசம் மணிமுத்தாறு அணைகள் மாஞ்சோலை எஸ்டேட் அகத்தியர் அருவி ஆரியங்காவு பாலருவி தென்மலை ஈக்கோ சுற்றுலா தலம், கல்லடா அணை ,அம்பநாடு எஸ்டேட் இவ்விடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த ரயில்களால் பயன் பெறுவர்.
மேலும் கோவில் தலங்களான திருநெல்வேலி பாபநாசம் தென்காசி திருமலைக்கோவில் ஆரியங்காவு அச்சன்கோவில் கொட்டாரக்கரை செல்வோரும் இந்த ரயில்களால் பயனடைவார்கள்.
எனவே இந்த ரயில்களை விரைவில் இயக்கிட ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் இந்த ரயில்களில் பயணிகள் செங்கோட்டை – புனலூர் பாதையிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்திட மேற் கண்ணாடி கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டி ஒன்றும் இணைக்கப்பட வேண்டும்.