ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உட்பட 2 பேர் கைது
காரியாபட்டியில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிக்கூண்டு பகுதியைச் சேர்ந்தவர் நக்கீரன். இவர் தனக்கு சொந்தமான இடத்தை அளந்து கொடுப்பதற்காக, நில அளவயரை சந்தித்துள்ளார். அப்போது கடம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் செல்வராஜ் (48), அந்த இடத்தை நாங்கள் அளந்து கொடுக்கிறோம் என நக்கீரனிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதற்கு ரூ. 25 ஆயிரம் மட்டுமே தன்னால் வழங்க முடியும் என நக்கீரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நக்கீரன், விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் மீது லஞ்ச புகார் அளித்தார்.
இந்த சூழலில் காரியாபட்டியில் அலுவலகத்ல் இருந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜிடம், ரூ. 25 ஆயிரத்தை நக்கீரன் கொடுக்க சென்றுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர், அருகே உள்ள பக்கம் ஒன்றைச் சேர்ந்த தையல் கடைக்காரர் மோகன் தாஸிடம், அந்தப் பணத்தை கொடுக்க கூறியுள்ளார்.
இதையடுத்து, ரூ. 25 ஆயிரத்தை நக்கீரனமிடமிருந்து மோகன்தாஸ் பெற்ற போது, விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வாளர்கள் பூமிநாதன், சாலமன் துரை கையும் களவுமாக பிடித்தனர். இதை தொடர்ந்து, மோகன்தாஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான செல்வராஜை கைது செய்தனர்.
திருமண விழாவில் ரூ.1.71 லட்சம் மொய் பணம் திருடிய இரு பெண்கள் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண விழாவில் நூதன முறையில் மோசடி செய்து மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் பணத்தை திருடிய உசிலம்பட்டியைச் சேர்ந்த இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி. இவரது மகன் சக்திவேலுக்கு கடந்த ஞாயிறன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்கு வந்த மொய்ப்பணம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் காணவில்லை என வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சக்திவேல் என்பவர் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு பெண்கள் மொய்ப்பணத்தை திருடி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பணத்தை திருடிய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி முத்துச்செல்வி(54), அமாவாசை மனைவி பாண்டியம்மாள்(42) ஆகிய இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, ரூ.1.71 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்: முத்துச்செல்வி, பாண்டியம்மாள் இருவரும் திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் போல் சென்று உள்ளனர். அங்கு மொய் எழுதுபவரிடம் சில்லறை வாங்குவது போல் அவரது கவனத்தை திசை திருப்பி அங்கிருந்த பணத்தை திருடி உள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களில் சில்லரை வாங்குவது போல் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனர்.
சிவகாசியில் ஸ்டேஷனரி குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து!
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கிருஷ்ணமூர்த்தி என்பதற்கு சொந்தமான லாமா & கோ என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை இயங்கி வருகிறது. இது பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இன்று அதிகாலை குடோனில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் பேரில் நிலைய அலுவலர் வெங்டேஷன் தலைமையில் சம்பவத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரியும் தீயை அணைத்தனர். அதனால் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் பல லட்ச மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் இது குறித்து உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகார் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.