- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் 15 ஆண்டுகளுக்குப் பின், சங்கரன்கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

15 ஆண்டுகளுக்குப் பின், சங்கரன்கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் சங்கரநயினார் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

#image_title
#image_title

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் சங்கரநயினார் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பெருவாரியான பக்தர்கள் கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்வாமியின் அருள் பெற்றார்கள்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயில்களில் ஒன்று, சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவில். இந்தக் கோவிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின் 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் குடமுழுக்குத் திருவிழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறு கால யாக சாலை பூஜைகளிலும் தினமும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  வெள்ளிக்கிழமை இன்று காலை ஆறாம் கால யாக சாலை பூஜைகளுக்குப் பின்னர், கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 

ALSO READ:  கோயிலை மீட்க போராடவும் பக்தர்களுக்கு உரிமை இல்லை! ஒடுக்குமுறையின் உச்சம்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் உள் பிராகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. இதன் பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவற்றுடன், ஆச்சார்ய விஷேச சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகியவை நடந்தேறி, 2-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பின் மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஆச்சார்ய விஷேச சந்தி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகியவற்றுடன் 3 மற்றும் 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இதன் பின் நேற்று காலை பரிவார யாகசாலையில் மகாபூர்ணாஹுதி, தீபாராதனை முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பிரதான யாகசாலையில் மஹாபூர்ணாஹுதி, உபச்சாரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, கும்பாபிஷேக தினமான இன்று 6ஆம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்று காலை 5 மணிக்கு மேல் மங்கள வாத்தியம், 5.30க்கு வேத பாராயணம், காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 6:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 

ALSO READ:  டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி!

காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து  9 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 9.20க்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயணசாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.

இந்தக் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அ.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அல்லி ராணி அய்யாத்துரை பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால்,  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சங்கரன்கோவில் நகரம் களைகட்டியுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்காசி மாவட்ட எஸ்பி., சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டிருந்தனர். 

ALSO READ:  ஆன்மீகம் - வாழ்வின் நோக்கம்

கும்பாபிஷேக தினமான இன்று மாலை 4.30க்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறும்.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நமது பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. நிகழ்ச்சி குறித்த காட்சிப் பதிவுகளைக் காண லிங்க்…

https://fb.watch/u8ypM1MCYm

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version