தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீநவநீதகிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கோகுலாஷ்டமி விழாவில் நேற்றூ ஸ்ரீ கிருஷ்ண ஜனனம் சிறப்பு பூஜைகள் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஆற்றங்கரைத் தெரு நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயிலில் கோகுலாஷ்டமி விழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் ஆக.18ம் தேதி தொடங்கி ஆக.28 வரை கோகுலாஷ்டமி விழா சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு கும்ப பூஜை, புருஷ சூக்த ஜபம், ஹோமம், வேதபாராயணம் ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.
மாலை நேரங்களில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனங்கள் நடைபெற்றன. செங்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணா பஜனை மண்டலி, ஸ்ரீ ஆண்டாள் இசைக்குழு, ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி, ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் பஜனை மண்டலி, உதிரிப்பூக்கள் குழுவினர்களின் நாம சங்கீர்த்தனங்கள், கங்கா நாராயணன் குழுவினரின் ஸ்ரீவேங்கடேஸ்வர அந்தாதி, நவநீதகிருஷ்ணன் பக்திப் பாடல்கள் ஆகியவை பாடப்பெற்றன.
மேலும் செங்கோட்டை உபயபாரதீ கன்யாகுருகுல சிறுமியர் சுலோகங்கள், பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பு செய்தார்கள்.
ஆக.25 ஞாயிறு அன்று, சென்னையில் இருந்து வந்திருந்த செங்கோட்டை சகோதரிகள் குமாரி கல்யாணி, குமாரி கோகிலா ஆகியோரின் கர்நாடக இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கோகுலாஷ்டமி தினமான திங்கள் அன்று சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், வழுக்கு மரம் ஏறுதல், உறியடி என நிகழ்ச்சிகள் களை கட்டின. வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் கோவில் விழா கமிட்டியாரால் வழங்கப்பட்டன.
மாலை 7 மணிக்கு விசாலம் ராமசுப்பிரமணியன் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
கோகுலாஷ்டமி உத்ஸவத்தை முன்னிட்டு தினமும் மாலை 7 மணிக்கு பிரம்மஸ்ரீ யக்ஞராம சோமயாஜியின் ஸ்ரீமத் பாகவத உபந்யாஸம் நடைபெற்றது. கோகுலாஷ்டமி அன்று ஸ்ரீகிருஷ்ண ஜனனம் உபந்யாசத்தைத் தொடர்ந்து கண்ணன் பிறப்பு சிறப்பு தீபாராதனையும் அன்பர்களுக்கு அப்பம், அவல், சுண்டல் பிரசாதம் வழங்கலும் நடைபெற்றன.
உத்ஸவ தினங்களில் ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோகுலாஷ்டமி தினத்தன்று ஸ்ரீகிருஷ்ணருக்கு காலை சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து முழு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. மாலை ஸ்ரீ கிருஷ்ண ஜனனத்தை அடுத்து முழு சந்தனக்காப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் காட்சி அளித்தார்.
இன்று மாலை ஸ்ரீகிருஷ்ணர் திருவீதியுலா வர, நாளை புஷ்பாஞ்சலியுடன் இந்த கோகுலாஷ்டமி நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. நிறைவு நாளில் நெல்லை பிரம்மஸ்ரீ பாலகுருநாத பாகவதரின் ஹரிநாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோகுலாஷ்டமி உத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியின் சார்பில் மோகன் என்ற எஸ்.முத்துகிருஷ்ணன், என். அனந்தபத்மநாபன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.