எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்! வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெறும் வன்முறையை துரத்திட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து இளைஞர் முன்னணி மாநில அமைப்பாளர் சிபி சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்…
இந்த ஆண்டு கல்லூரி திறந்ததில் இருந்தே தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே மோதல் பற்றிய செய்திக்ள வந்த வண்ணம் உள்ளது. அது இப்போது கல்லூரி மாணவர் சுந்தரின் உயிரையே பறித்துள்ளது வேதனைக்குரிய விஷயமாகும். உயிரிழந்த மாணவர் சுந்தரின் குடும்பத்தினருக்கு இந்து இளைஞர் முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது..
இச்சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர் மூவர் கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு இடையே பிரிவினை குறித்து இந்து இளைஞர்கள் முன்னணி கவலை கொள்கிறது.
கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட அரசியல்வாதிகளும் திரைத்தாறையினரும் காரணமாக இருக்கின்றனர். அரசியல்வாதிகளும் மாணவர்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கை தக்கவைத்திடவும் , திரைத்துறையினர் தங்களின் பட வசூலுக்காகவும் ரூட் தல என்பது மாணவர்களின் கெளரவம் கெத்து என்று அப்பாவி மாணவர்களின் மனதில் பதிய வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் யார் ரூட் தல என்ற போட்டி தான் கல்லூரி மாணவர்களிடையே மோதல் உருவாக காரணமாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய அநாகரிகமான, கொடூர மனப்பான்மை வளர்ந்து வருவது காவல்துறைக்கும், உயர்கல்வித்துறைக்கும் தெரிந்தும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது காலத்தின் கொடுமை.
கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் மாணவர்கள் அல்லாத இடதுசாரி அமைப்புகளை சார்ந்தவர்கள் இருப்பதாகவும், அவர்களின் தவறான மூளைச் சலவையால் மாணவர்கள் மத்தியில் பிரிவினையும் மோதல் போக்கும் உருவாகிறது.
கல்லூரி மாணவர்களிடையே தங்கள் சமூகம், தன்னை போன்ற மாணவர் தான் அவர்களும் என்ற பண்பாட்டை வளர்க்க வேண்டும். ஆக்கப்பூர்வமான செயலில் அவர்களை ஈடுபடுத்தி உண்மையான தலைமை பண்பை வளர்க்க வேண்டும். இதைதான் இந்து இளைஞர்கள் முன்னணி தொடர்ந்து சொல்லி வருகிறது. இனி இதை வரும் காலங்களில் சென்னை மாநகர கல்லூரி மாணவர்களிடையே இந்து இளைஞர் முன்னணி செயல்படுத்தும்.
கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் இத்தகைய கொடூர செயலுக்கு காரணமாக இருக்கலாம். காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு கல்லூரி மாணவர்களின் போக்கை கண்காணித்து வன்முறையில் ஈடுபடுவோரை தனிமைப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எப்படி கல்லூரியில் ராக்கிங் நடைபெறாமல் தடுத்திட கடுமையான வழிகாட்டுதலை அரசு செயல்படுத்துகிறதோ, அதுபோல் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க ஒவ்வொரு கல்லூரியிலும் அமைதி குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் . அக்குழு மூலம் வெவ்வேறு கல்லூரி மாணவர்களிடையே நல்லுறவு மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து இளைஞர்கள் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்… என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.