கடந்த மாதம் வானொலி மூலம் ஒலிபரப்பான பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் மிகக் குறிப்பிடும் படியான ஒரு செய்தியை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். அது, இணையதள பிராடுகள் குறித்த ஒரு தகவல்தான்! அதன் மூலம் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட பிரதமர் மோடி பெரும் முயற்சி எடுத்திருந்தார்.
இந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஒரு இணைய ஃப்ராட் பற்றி குறிப்பிட்டு, பொது மக்கள் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலைச் சொன்னார். பாமர மக்களுக்கும் அவரது செய்தி சென்று சேர்ந்திருக்கும். இது டிஜிட்டல் இந்தியாவை சிறப்பாக்க உதவும்…
அவரது மன் கி பாத் உரையில் இடம்பெற்ற அந்த விழிப்புணர்வுக் கருத்து…
என் கனிவுநிறை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்க வைக்கிறேன்.
Fraud Caller 1: Hello
Victim : சார் வணக்கம் சார்.
Fraud Caller 1: வணக்கம்.
Victim : சொல்லுங்க சார்.
Fraud Caller 1: பாருங்க, நீங்க எனக்கு வந்திருக்கற எஃப் ஐ ஆர் நம்பர்ல 17 குற்றச்சாட்டுகள் இருக்கு. நீங்க இந்த நம்பரையா பயன்படுத்திட்டு இருக்கீங்க?
Victim : நான் இதை பயன்படுத்தலை சார்.
Fraud Caller 1: இப்ப எங்கிருந்து நீங்க பேசிட்டு இருக்கீங்க?
Victim : கர்நாடகாவிலேர்ந்து சார். இப்ப நான் வீட்டுல தான் இருக்கேன்.
Fraud Caller 1: ஓகே, உங்க ஸ்டேட்மெண்டை பதிவு செய்யுங்க, அதுக்குப் பிறகு உங்க நம்பர் ப்ளாக் செய்யப்படும். எதிர்காலத்தில இதனால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது, ஓகேயா?
Victim : சரி சார்.
Fraud Caller 1: இப்ப நான் உங்களை கனெக்ட் செய்யறேன், அவரு தான் புலனாய்வு அதிகாரி. நீங்க அவருகிட்ட உங்க ஸ்டேட்மெண்டை குடுத்திருங்க. அப்பத் தான் உங்க நம்பர் ப்ளாக் ஆகும். ஓகேயா?
Victim : சரி சார்.
Fraud Caller 1: சொல்லுங்க சார். நான் யாரு கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாமா? உங்க ஆதார் அட்டையை கொஞ்சம் காமிக்க முடியுமா, சரிபார்க்க விவரம் சொல்ல முடியுமா?
Victim : சார், என்கிட்ட என்னோட ஆதார் அட்டை இப்ப இல்லை, ப்ளீஸ் சார்.
Fraud Caller 1: ஃபோன், உங்க ஃபோன்ல இருக்கும்ல?
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: உங்க ஃபோன்ல உங்க ஆதார் அட்டையோட புகைப்படம் இருக்குமில்லையா?
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: நம்பராவது ஞாபகம் இருக்குமில்லையா?
Victim : இல்லை சார். நம்பரும் நினைவுல இல்லை சார்.
Fraud Caller 1: நாங்க வெறுமனே சரி மட்டும் பார்க்கணும், ஓகே, சரிபார்க்க மட்டும் தான் தேவை.
Victim : இல்லை சார்.
Fraud Caller 1: நீங்க பயப்படவே வேண்டாம், நீங்க ஒண்ணும் செய்யலைன்னா பயப்படவே தேவையில்லை. சரியா?
Victim : சரி சார் சரி சார்.
Fraud Caller 1: உங்க கிட்ட ஆதார் அட்டை இல்லைன்னு சொன்னா, சரிபார்க்க எனக்கு ஏதாவது ஒரு ஆவணத்தையாவது குடுங்க!!
Victim : இல்லை சார், நான் கிராமத்திலேந்ர்ந்து வந்திருக்கேன், என்னோட எல்லா ஆவணங்களுமே அங்க வீட்டுல தான் சார் இருக்கு.
Fraud Caller 1: ஓகே
Fraud Caller 2: நான் உள்ள வரலாமா சார்?
Fraud Caller 1: வாங்க.
Fraud Caller 2: ஜய் ஹிந்த்
Fraud Caller 1: ஜய் ஹிந்த்
Fraud Caller 1: இந்த ஆளோட one sided video callஐ பதிவு செய். ஓகே.
ALSO READ: பள்ளியில் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு கோகுலாஷ்டமி கொண்டாட்டம்!
# இந்த ஒலிப்பதிவு வெறும் தகவலுக்காக மட்டுமல்ல, இது ஏதோ கேளிக்கைக்கான ஒலிக்குறிப்பல்ல, ஆழமான கவலையளிக்கவல்ல ஒலிக்குறிப்பு இது. நீங்கள் இப்போது கேட்ட உரையாடல், டிஜிட்டல்கைது மோசடி தொடர்பானது. இந்த உரையாடல் பாதிக்கப்பட்ட நபருக்கும், மோசடி செய்பவருக்கும் இடையிலானது. டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர், போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ சொல்லிக்கொண்டு, இப்படி விதவிதமான வகைகளில், போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள், மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள்.
மனதின் குரலின் நேயர்கள் பலர் இது குறித்து நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். வாருங்கள், இந்த மோசடிப் பேர்வழிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், இந்த அபாயகரமான விளையாட்டு என்ன என்பது தொடர்பான விபரங்களை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அதே போல மற்றவர்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
முதல் தந்திரமான உத்தி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்கிறார்கள், எடுத்துக்காட்டாக, ”கடந்த மாதம் நீங்கள் கோவா போயிருந்தீர்கள், இல்லையா?, உங்களுடைய மகள் தில்லியில் படிக்கிறாள், இல்லையா?” என்பது போன்று. இவர்கள் உங்களைப் பற்றி போதுமான அளவு தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் திகைப்பை ஏற்படுத்துகிறார்கள். அடுத்த தந்திரம் – அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள், சட்டப் பிரிவுகளைச் சொல்வார்கள், அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள். பிறகு அவர்களுடைய அடுத்த தந்திரம் தொடங்கும். மூன்றாவது தந்திரம் – நேரக்குறைவு என்ற அழுத்தம்.
“இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்”. என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல்ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். டிஜிட்டல் கைதுக்கு இரையானவர்களில் அனைத்து நிலைகள், அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அச்சம் காரணமாக மக்கள், தங்களுடைய கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கின்றார்கள். இவை போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வாயிலாக இவை போன்று புலனாய்வினை என்றுமே செய்ய மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன். ”நிதானியுங்கள் – சிந்தியுங்கள் – செயல்படுங்கள்”. அழைப்பு வந்தால், “நிதானியுங்கள்” – அச்சப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள், முடிந்தால் ஸ்க்ரீன்ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள். இதன் பிறகு வருவது அடுத்த கட்டம். முதல் கட்டம் நிதானியுங்கள், அடுத்த கட்டம், ”சிந்தியுங்கள்”.
எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளியுங்கள். முதல் கட்டம், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு வருவது மூன்றாவது கட்டம். முதல் கட்டத்தில் நான் நிதானியுங்கள் என்றும்,
இரண்டாம் கட்டத்தில் சிந்தியுங்கள் என்றும் கூறியிருந்தேன், இப்போது மூன்றாவது கட்டத்தில் கூறுகிறேன் – “நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”. தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள், குடும்பத்தார் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள், ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். நிதானியுங்கள், பிறகு சிந்தியுங்கள், அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள், இந்த மூன்று படிநிலைகளும் உங்களுடைய டிஜிட்டல் பாதுகாப்புக் காவலர்களாக ஆகும்.
நண்பர்களே, நான் மீண்டும் கூறுகிறேன், டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது, இது பச்சையான மோசடி, புரட்டு, போக்கிரிகளின் கும்பல் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது, இவர்களைப் பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்காக தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டிருக்கிறது. அமைப்புகளின் தரப்பிலிருந்து இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான காணொளி அழைப்பு எண்கள் அரசு அமைப்புக்களின் தரப்பிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான சிம் கார்டுகள், செல்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் கூட முடக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்க அமைப்புகள் தங்களுடைய பணியைப் புரிந்து வருகின்றன என்றாலும், டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடந்தேறி வரும் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும், அனைத்துக் குடிமக்களும் விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். யாரெல்லாம் இப்படிப்பட்ட சைபர் மோசடிக்கு இரையாகி இருக்கின்றார்களோ, அவர்கள் அதிக அளவு மக்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் #SafeDigitalIndia என்பதைப் பயன்படுத்தலாம். இந்த சைபர் மோசடிக்கு எதிராக விழிப்புணர்வு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகள்-கல்லூரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன், இதில் அதிக அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். சமுதாயத்தில் அனைவரின் முயற்சிகள் வாயிலாக மட்டுமே நாம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்.
— இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நமக்கு செல்போன்களில் இது போல் குறுஞ்செய்திகள் – எஸ் எம் எஸ்கள் – வந்திருக்கும். எத்தனை எத்தனை எத்தர்கள் இப்படி ஃபிஷ்ஷிங் மெசேஜஸ் எனப்படும் தூண்டில் வலை விரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள்?! நாமும் அவற்றைக் கடந்துதான் வந்திருப்போம். எல்லாம் நம்மிடம் உள்ள பணத்தைப் பறிப்பதற்கான திருட்டு வேலை தான்! முன்பெல்லாம் திருடர்கள் நேரடியாக வந்தார்கள். இப்போது நம் மொபைல்கள், இமெயில்கள், கணினி உளவு மென்பொருள்கள் வாயிலாக திருட்டுத் தனங்களை அரங்கேற்றுகிறார்கள். இவை நாம் அசந்திருக்கும் சிறு பொழுதுகளில் மட்டுமே நடக்கிறது.
ஃபெடெக்ஸ் குரியர் சர்வீஸ் – எனும் பெயரில் நடந்த, நடக்கும் மோசடிகளில் குறிப்பிட்ட வகையைத்தான் பிரதமர் மோடி தன் பேச்சில் குறிப்பிட்டார். அது போல் அச்சத்தின் விளைவால் தங்கள் பணத்தை லட்சக் கணக்கில் இழந்தவர்கள் பலர்.
இப்படி இன்னொரு வகையான மோசடி இப்போது நடந்து வருகிறது. கல்லூரியில் இருப்பாள் மகள்; அம்மாவுக்கு வரும் போன்கால்: உஷாரா இருக்கச் சொல்கிறது போலீஸ்!
‘கல்லூரியில் படிக்கும் உங்கள் மகள் குற்றம் செய்துவிட்டதாக கூறி, மொபைல் போனில் பேசும் நபர்களிடம் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தி உள்ளார்.
இப்போதைய இணைய உலகம்… இம்சையான உலகம் என்று சொல்லலாம். காலம் சுருங்கிவிட்டாலும், கண்முன் நடக்கும் குற்றங்கள் என்னவோ குறையவில்லை. .
தொழில்நுட்பம் வளர,வளர நுட்பமாக குற்றங்கள் தினுசு, தினுசாக உதயமாகிறது. அப்படி நிகழும் ஒரு குற்றங்களில் ஒரு வகை, அவற்றில் இருந்து தப்பியிருப்பது எப்படி என்று முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது;
கல்லூரியில் படிக்கும் மகள் பெயரை சொல்லி அவரின் தாயாருக்கு மொபைல் போனில் அழைப்பு வருகிறது. உங்கள் மகள் பாலியல் தொழில் செய்கிறார், கையும், களவுமாக பிடிபட்டார் என்று காவல்துறையில் இருந்து பேசுவதாக ஒருவர் கூறுகிறார். இதைக் கேட்டு தாய் மயங்கி விழுகிறார்.
சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்த பின்னர், அந்த குறிப்பிட்ட போன் நம்பரை தொடர்பு கொள்ளும் தாய், ‘என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்கிறார். ‘ஒரு லட்சம் ரூபாய் அனுப்புங்கள், எல்லாம் சரி செய்துவிடுகிறோம்’ என்று மறுமுனையில் கூற. பணத்தை தாய் அனுப்புகிறார்.
பின்னர் தமது மகளுக்கு தாய் போன் செய்தபோது தான், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதும், மோசடிப் பேர்வழிகள் தாயிடம் பொய்யான ஒரு சம்பவத்தை சொல்லி மிரட்டி, தாயிடம் பணம் பறித்திருப்பதும் தெரியவருகிறது.
இதுபோன்ற சம்பவம் வேறு ஒரு தாயாருக்கு நிகழ்ந்திருக்கிறது.
‘கல்லூரியில் படிக்கும் உங்கள் மகள் போதை பொருள் கடத்தி சிக்கிக் கொண்டுள்ளார், இதோ எங்கள் பக்கத்தில் தான் நின்றுகொண்டு அழுகிறார்’ என்று கூறி போனில் ஏதோ ஒரு பெண்ணின் அழுகுரலை ஒலிக்க செய்கின்றனர். இதை கேட்ட தாய் அங்கேயே மாரடைப்பு வந்து இறந்துபோகிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. உங்கள் மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். இப்படி ஏதேனும் ஒரு போன்கால் வந்தால் அதை சட்டை செய்ய வேண்டாம். — இவ்வாறு சைலேந்திரபாபு அந்த வீடியோ பதிவில் கூறி தாய்மார்களை அலர்ட் செய்துள்ளார்.