உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் அர்ச்சகர்களை மிரட்டி வெளியேற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையின் அராஜகச் செயலைக் கண்டிப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர். த.அரசுராஜா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…
உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் புகுந்து அர்ச்சகர்களை வெளியேற்றி கோவில் சன்னதியை பூட்டிய அராஜகத்தை இந்து முன்னணி கண்டிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் இன்று 16.10.2024 காலை சன்னதிக்குள் காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் நுழைந்து அங்கு பல ஆண்டுகளாக பரம்பரையாக பூஜை செய்து வரும் அர்ச்சகர்களை வெளியே தள்ளி கோவில் சன்னதியை பூட்டி உள்ளனர் இந்த அராஜக செயலை இந்தமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கோவிலில் மக்கள் வழிபடுவதற்கும் அதற்கு வசதிகள் செய்வதற்கும் தான் நிர்வாகமும் அறநிலையத்துறையும் காவல்துறையும் இருக்க வேண்டுமே தவிர அர்ச்சகர்களை வெளியேற்றி கோவிலை பூட்டுவது காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.
வேற்று மத வழிபாட்டு தலங்களில் இதுபோல் தமிழக அரசோ காவல்துறையோ சென்று பூட்டி விட முடியுமா ? திமுக அரசின் இந்துவிரோத நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவே பக்தர்கள் கருதுகின்றனர்.
மேலும் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் உள்ள நகைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது கையகப்படுத்தி அளவீடு செய்து வருவதாக தெரிகிறது. தமிழக அரசின் நோக்கத்தை இது தெளிவுபடுத்துகிறது.
திருக்கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்கு திருக்கோவில் வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யாமல் பல ஆண்டுகளாக கோவில் வளர்ச்சிக்கு தடைக்கலாகவே இருந்து வருகிறது.
பக்தர்கள் வழிபட செல்லும் பாதைகள் எல்லாம் கம்பி வைத்து அடைத்து தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் இடையூறு செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டு கோவில் பூட்டப்பட்டது மிகுந்த வேதனைக்குரிய செயலாகும்.
தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறையின் இந்த செயலை கண்டித்து நாளை சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தும் போராட்டத்திற்கு இந்துமுன்னணி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது இந்துமுன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துக்கொள்கிறது
உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலை பக்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவின் நிர்வாகத்திற்கு கொண்டு வருவதே கோவிலின் வளர்ச்சிக்கும் பக்தர்களுக்கும் உறுதுணையாக இருக்கும்.
இந்துக்களின் வழிபாட்டு விவகாரங்களில் காவல்துறையும் அறநிலையத்துறையும் தமிழக அரசும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது