சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி
பண்டிகை கால சிறப்பு ரயில்கள் .. மைசூரில் இருந்து..?
தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் -செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ள நிலையில் மைசூர் செங்கோட்டை சிறப்பு ரயிலை தீபாவளி மற்றும் சபரிமலை சீசனுக்கு மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06001) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 06 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
செங்கோட்டை சிறப்பு ரயில்…
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில் (06005) அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 06 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06006) அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 07 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இது ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 15 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.
தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள்..
தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06049) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05, 12 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். (12.45 மணி என்பது அந்த நாள் துவக்கம் என்பதால் அன்றைய நாளிலேயே சேருமிடம் சேருகிறது. மீண்டும் அதே நாளிலேயே மறு மார்க்கத்தில் புறப்படுகிறது) மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில் (06050) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05, 12 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 03.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். ன்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று புதன்கிழமை (அக்டோபர் 23) காலை 8 மணிக்கு துவங்கி விருவிருப்பாக முன்பதிவு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மைசூர் -செங்கோட்டை சிறப்பு ரயில் கடந்த மாதம் இயக்கப்பட்டது.
இந்த ரயிலை மீண்டும் ராஜபாளையம் மதுரை கரூர் சேலம் வழித்தடத்தில் தீபாவளி மற்றும் சபரிமலை சீசனுக்கு மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் மைசூர் -திருவனந்தபுரம் இடையே மதுரை ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழியாக தீபாவளி சபரிமலை சீசனுக்கு இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்