மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜயந்தி மற்றும் 62வது குருபூஜை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செய்யும் வகையில், அவரது சிலைக்கு மாலையிட்டு மரியாதைகளைச் செய்தனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை மரியாதை செய்வதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் இன்று குவிந்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் அரசின் சார்பில் கலந்து கொண்டு அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு,பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, மகேஷ் அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
உசிலம்பட்டியில், தேவர் சிலைக்கு மரியாதை!
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி பசும்பொன் முத்து
ராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு தேமுதிக சார்பில், மதுரை தெற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், உசிலம்பட்டி நகர செயலாளர் அசோகன் ,உசிலை ஒன்றிய செயலாளர் ஒய். எஸ் .டி. சமுத்திரபாண்டி, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், ஏழுமலை பேரூராட்சி செயலாளர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் எம். எஸ். பாண்டியராஜன், வாசக ராஜா, அழகு ராஜா, காசிமாயன், மகளிர் அணி பாண்டியம்மாள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில், தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்!
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜையை முன்னிட்டு – பார்வட் ப்ளாக் கட்சி சார்பில் 117 முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜை விழா நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு இன்று திமுக சார்பில் நகர, ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தேமுதிக, பாரதிய பார்வட் ப்ளாக், தென்னிந்திய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் கட்சியினர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி நகர் மன்றத் தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பினர், கிராம பொதுமக்கள் ஊர்வலமாக வந்து தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, அகில இந்திய பார்வட் ப்ளாக் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கதிரவன் தலைமையில் 117 வது தேவர் குரு பூஜையை முன்னிட்டு 117 முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்த பெண்கள் தேவர் சிலைகளுக்கு பால்அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.