நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய (வெட்டிய) சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் உறவினர்கள் நான்கு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் மீது பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, பொருட்களை சேதப்படுத்துதல் ஜாதி ரீதியாக திட்டுதல், அவதூறான வார்த்தைகளை பேசுதல் ,உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 191, 296, 381, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகள் என காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
முன்னதாக, குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய கோரி சிறுவனின் உறவினர்கள் மேலப்பாட்டத்தில் சாலைமறியல் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மக்களை சமாதானப் படுத்தினார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ்(வயது 55). கூலி தொழிலாளி. இவரது மகன் மனோஜ்குமார்(17). இவர் அபிஷேகப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை திருமலைக்கொழுந்துபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிர்திசையில் வந்த கார் ஒன்று அவர் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ்குமார், காரில் இருந்தவர்களை சத்தம் போட்டுள்ளார்.
இதனால் காரில் இருந்த கும்பல் ஆத்திரம் அடைந்து காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளது. அதில் 3 பேர் மனோஜ்குமாரை தாக்கத் தொடங்கவும், அந்தப் பகுதி மக்கள் சத்தம் போட்டதால் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் மாலையில் வீட்டில் தனியாக மனோஜ்குமார் இருப்பதை அறிந்து மேலப்பாட்டத்திற்கு காரில் சென்றுள்ளனர்.
அவரது வீட்டு கதவை அரிவாளல் பல்வேறு இடங்களில் வெட்டி சேதப்படுத்திய கும்பல், அங்கிருந்த மின்விசிறி, ஷோபா, சமையல் பாத்திரங்களை சரமாரி வெட்டினர். பின்னர் அங்குள்ள அறையில் இருந்த மனோஜ்குமாரை கால், கை, காது உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டினர். பின்னர் பீர்பாட்டிலால் அவரது தலையில் அடித்துவிட்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த பாளை தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த மாணவன் மனோஜ்குமாரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறை உரிய பாதுகாப்பினை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் கும்பலை பிடிக்க தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சீவலப்பேரி சப்-இன்ஸ்பெக்டர் நாஞ்சில் பிரித்விராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரவோடு இரவாக திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த முத்துமாலை, லட்சுமணன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தொடர்புடைய 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மாணவனை கொடூரமாக வெட்டிய கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீதமுள்ளவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.