![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2022/12/kadeswara-subramaniam-hindu-munnani.jpeg?resize=1024%2C576&ssl=1)
*இந்துக்கள் பகுதியில் கலவரத்தை தூண்டும் வகையில் மதமாற்றம் செய்ததோடு தாக்கவும் செய்த பாதிரி மீது புகார் கொடுத்த இந்து இளைஞர்களை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிஷனரிகளின் மதமாற்ற வேலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கிவிடபட்டுள்ளது.
பாதிரியார்கள் பொது வெளியில், திமுக ஆட்சிக்கு வந்தது மிஷனரிகள் போட்ட பிச்சை என்பதும் அதை வழிமொழியும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் மிஷனரிகளின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த ஆட்சி உங்களுக்கான ஆட்சி என்று பேசுவதும் மதமாற்ற மிஷனரிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுப்பதால் பல வகையிலும் அப்பாவி இந்துக்களை மதமாற்றி வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே போதும் மிஷனரிகள் மதமாற்ற அறுவடைக்கு வேன்கள், கார்கள், சப்பரங்கள் போன்று அலங்கரிக்கபட்ட வாகனங்களை எடுத்துகொண்டு உக்கிரமாக மதமாற்றம் செய்ய கிளம்பி விடுவது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில் இந்த வருஷத்திற்கான கிறிஸ்துமஸ் விழா நெருங்கி வரும் நிலையில் கிராமம் கிராமமாக மிஷனரிகள், பாதிரிகள் மதமாற்றம் செய்ய படையெடுத்துவிட்டார்கள்
உரிய அனுமதி இல்லாமல், வாகனங்களில் ஒலிபெருக்கிகளை பொருத்திக்கொண்டு பைபிள் வசனங்களை ஒலிக்கவிட்டு தேர்தல் பிரச்சாரம் போல மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 06/12/2024 அன்று மாலை புதுகோட்டை மாவட்டம், சார்லஸ் நகரை சேர்ந்த ஒரு பாதிரியார் தன் வசிப்பிடத்தில் இருந்து 15 கிமி தூரத்தில் உள்ள ஆரியூர் கிராமத்துக்கு வேன் மூலம் கும்பலாக சென்று கிறிஸ்துமஸ் விழா என்ற பெயரில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டிகேட்ட இளைஞர்களை தன் ஆதரவாளர்களை வைத்து பாதிரியார் தாக்கியுள்ளார்.
பாதிக்கபட்டவர்கள் அன்னவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சமாதானம் செய்து பாதிரியாரை பாதுகாப்பாக அனுப்புவதிலேயே முனைப்பு காட்டியுள்ளதாக தெரிகிறது.
பாதிரியார் கும்பலால் தாக்குதலுக்குள்ளான அப்பாவி இளைஞர்கள் பாதிரியார் மீது தாக்குதல் நடத்தியதாக பொய் புகார் அளித்ததின் பேரில் திருக்கோனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து அப்பாவி இந்து இளைஞர் கைது செய்யபட்டுள்ளார். காவல்துறையின் பாரபட்சமான செயல் கடும் கண்டனத்துகுரியது ஆகும்.
அரசியலமைப்பு சட்டம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் மதத்தை கடைபிடிப்பதற்கான உரிமையை கொடுத்திருந்தாலும் எந்தவொரு குடிமகனும் எந்தவொரு குடிமகனையும் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவதை அது அனுமதிக்கவில்லை என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் சட்டத்துக்கும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிராக மிஷனரிகள் புற்றீசல் போல கிளம்பி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஏழை எளிய படிப்பறிவில்லாத கிராம மக்களை பலவாறாக மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்துவருகிறார்கள்,
வீடுகளில் ஜெபக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி இல்லாமல் சர்ச்சுகள் ஜெபகூடங்கள் கட்டகூடாது என்றும் நம் மாநில உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் அரசும் மிஷனரிகளும் கொண்டுகொள்வதே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.
அந்த வகையில் மிஷனரிகளுக்கு ஆளும் திமுக அரசு மறைமுகமாக துணை போகிறது என்றால் மிகையில்லை.
அதே நேரத்தில் மிஷனரிகளின் எல்லையற்ற மதமாற்ற பிரச்சாரமும் வன்முறை தாக்குதலும் மிகப்பெரும் மதமோதலை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதை ஆளும் அரசு கவனிக்க தவறுவது மாபெரும் ஆபத்தில் போய் முடியும் என்றால் மிகையில்லை.
கோவில் விழாவிற்கு ஒலிப்பெருக்கி அனுமதி, விழா நடக்கும் நேரம், இடம், வழிப்பாதை எல்லாம் எழுதி வாங்கி அனுமதி வாங்க நிர்பந்திக்கும் காவல்துறை தெருத்தெருவாக அனுமதியின்றி நடக்கும் மதமாற்ற நிகழ்ச்சிகளை தடுப்பதே இல்லை என்பது பாரபட்சமானது.
எனவே பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும், புதுகோட்டை சம்பவத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்யபட்ட இளைஞரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் பாதிக்கபட்ட இளைஞர்கள் மீதான பொய் வழக்கை உடனடியாக கைவிட வேண்டும், என்று இந்துமுன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.