- Ads -
Home சற்றுமுன் ‘இஸ்ரோ’வின் புதிய தலைவராக, தமிழகத்தின் வி.நாராயணன்!

‘இஸ்ரோ’வின் புதிய தலைவராக, தமிழகத்தின் வி.நாராயணன்!

டாக்டர் வி நாராயணன், 1984 இல் இஸ்ரோவில் சேர்ந்தவர். தற்போது திருவனந்தபுரம், வலியமலையிலுள்ள திரவ உந்தும அமைப்புகள் மையத்தின்

இஸ்ரோவின் அடுத்த சேர்மன் பொறுப்பிற்கு டாக்டர் V. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதய சேர்மன் S. சோம்நாத்தின் பதவிக் காலம் ஜனவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது.


‘இஸ்ரோ’வின் புதிய தலைவருக்கு அறிவியல் வாழ்த்துக்கள்!

நெல்லை சு.முத்து

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட டாக்டர் வி.நாராயணன் அவர்கள், வரும் ஜனவரி 14 அன்று இந்திய விண்வெளித் துறையின் புதிய தலைவராகப் பதவியேற்கிறார்.

டாக்டர் வி நாராயணன், 1984 இல் இஸ்ரோவில் சேர்ந்தவர். தற்போது திருவனந்தபுரம், வலியமலையிலுள்ள திரவ உந்தும அமைப்புகள் மையத்தின் (லிக்விட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் சென்டர், எல்பிஎஸ்சி) இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த மையம், திரவ, பகுதி அதி குளிர் (Semi Cryogenic), அதி குளிரிய (கிரையோஜெனிக்) உந்துவிசை நிலைகளின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

செயற்கைக்கோள்களுக்கான வேதியியல் மற்றும் மின் உந்துவிசை அமைப்புகளுடன், ஏவுகலன்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் உந்துவிசை அமைப்பு ஆகியவற்றின் நுட்பமான கண்காணிப்புக்குரிய இயல்மாற்றிகள் உருவாக்கிய பெருமைக்கு உரியவர் நாராயணன் அவர்கள்.

இந்த மையத்தின் இயக்குநராக ஆவதற்கு முன்பு பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர். ஆரம்பக் கட்டத்தில், ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (விஎஸ்எஸ்சி) வானிலை ஆய்வூர்திகள் (சவுண்டிங் ராக்கெட்டுகள்), திறன் கூட்டிய செயற்கைக்கோள் ஏவுகலன் (ஏஎஸ்எல்வி), துருவப்பாதைச் செயற்கைக்கோள் ஏவுகலன் (பிஎஸ்எல்வி) ஆகியவற்றின் திட உந்துவிசைத் துறையில் பணியாற்றினார்.

ALSO READ:  என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்!

தேய்படு புறக்கூம்புக் குழாய்கள் (Ablative nozzle systems), கோர்வைப் பொருள் உந்துபொறிகலன்கள், எரியூட்டி உறைகள் (Composite motor cases and Composite Igniter cases) தயாரிப்பிலும் பங்களித்த நிபுணர்.

1989 ஆம் ஆண்டில், கரக்பூர், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) முதுநிலைப் பட்டப் படிப்பில் ‘கிரையோஜெனிக்’ (அதிகுளிரியம்) பொறியியல் துறையி்ல் வெள்ளிப் பதக்கத்துடன் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.

திரவ உந்தும அமைப்புகள் மையத்தின் கிரையோஜெனிக் உந்துவிசைத் துறையில் பணி தொடங்கி, ‘கிரையோஜெனிக்’ மேல் கட்ட (CUS) உந்துபொறியின் வெற்றிகரமான வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்

மேலும், மனித விண்வெளிப் பயணங்களுக்கான முன்பரிசோதனையாக, ‘விண்கூடு வளிமண்டல நுழைவுப் பரிசோதனை’ (Crew module Atmospheric Re-entry Experiment, CARE) இடம்பெற்ற அதி கனரக ‘புவி ஒத்தியக்கச் செயற்கைக்கோள் ஏவுகலன் மார்க்3 (GSLV MkIII) பயணத்திற்காக, ‘சி25’ கிரையோஜெனிக் திட்டத்தின் இயக்குனராக, சி25 கட்டத்தை உருவாக்கி வழங்கியவர்.

இதற்கு மத்தியில், 2001 ஆம் ஆண்டு கரக்பூரில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘விமானவியல்-விண்பயணப் பொறியியல்’ (‘ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்’) துறையில் முனைவர் பட்டமும் பெற்றார் என்றால் பாருங்களேன்.

ALSO READ:  தமிழகத்தின் தொன்மை வரலாறு அறியாத அநாகரீக துணை முதல்வர்!

“கிரையோஜெனிக் உந்துபொறிகளில் பயணக் கட்டுப்பாட்டிற்கான பாய்மச் சுழலிப் பகுதிகள்’ (கேவிடேட்டிங் வென்ச்சரிஸ்)” என்ற தலைப்பில் முதுநிலைப் பட்ட ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாகவும், உந்துவிசைக்கான எரிபொருள்- ஆக்சிகரணிக் கலவை விகிதக் கட்டுப்பாடு அமைப்புகள் (“த்ரஸ்ட் அண்ட் மிக்ஸ்ச்சர் ரேஷியோ ரெகுலேஷன் சிஸ்டம்ஸ் ஃபார் த்ரஸ்ட் அண்ட் மிக்ஸ்ச்சர் ரேஷியோ ரெகுலேஷன் சிஸ்டம்ஸ்”) என்ற தலைப்பில் முனைவர் பட்ட (பிஎச்.டி) ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாகவும் முனைவர் பட்டப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்திய ஏவுகலன்களின் வளர்ச்சியில் நேரடியாகப் பயன்படுத்தப்படத் தக்க வகையில் கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகள் சார்ந்த ஆராய்ச்சி அது.

‘சந்திரயான் நிலாப்பயணம், ‘ககன்யான்’ மனித விண்வெளிப்பயணம், ‘ஆதித்யா எல்-1’ சூரிய ஆய்வுக்கலம் போன்ற முக்கியத் திட்டங்களில் திரவ உந்துபொறி நுட்பத்தில் சிறப்பாகப் பங்களித்தவர் டாக்டர். நாராயணன்.

இவர் இந்திய விண்வெளி அறிக்கைகள் (1200), இதழ்/மாநாட்டுக் கட்டுரைகள் (50) ஆகிவற்றுடன், புத்தக அத்தியாயங்கள் என ஏராளமான தொழில்நுட்பக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட பொறியியல் நிறுவனங்களில் பல முக்கிய உரைகள் ஆற்றியதுடன், பத்து பட்டமளிப்பு விழாக்களில் சிறப்புரைகள் வழங்கி இருக்கிறார்.

இத்தனைச் சிறப்புகள் மிக்கவருக்கு இந்திய விண்வெளி சங்கத்தின் (Astronautical Society of India, ஏஎஸ்ஐ) தங்கப் பதக்கம், ராக்கெட் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஏஎஸ்ஐ விருது, ‘இந்திய உயர் ஆற்றல்பொருள்கள் சங்கம்’ (‘ஹை எனர்ஜி மெட்டீரியல்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா’) வழங்கிய குழு விருது, சிறந்த சாதனை மற்றும் செயல்திறன் சிறப்பு விருதுகள் சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தின் கௌரவ அறிவியல் முனைவர் பட்டம் (ஹானரிஸ் காசா) பட்டமும் வழங்கப்பட்டுள்ளதில் வியப்பில்லை.

ALSO READ:  ஆதீன சொத்துகளை அபகரிக்க சதி; மடத்தின் பாரம்பரியத்தை இழிவுபடுத்த அறநிலையத்துறை எண்ணம்?

ஐஐடி, காரக்பூரின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது-2018, நேஷனல் டிசைன் & ரிசர்ச் ஃபோரம் ஆஃப் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) வழங்கும் தேசிய வடிவமைப்பு விருது-2019, ‘இந்திய விமானவியல் சங்கம்’ (‘ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, AeSI) வழங்கும் தேசிய விருது-2019 ஆகிய பல கௌரவிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

அன்றியும் டாக்டர். நாராயணன் ‘பன்னாட்டு விண்பயணவியல் கழகம்’ (International Academy of Astronautics), இந்திய தேசிய பொறியியல் அகாடமி ஆகிய அமைப்புகளின் உறுப்பினர், சர்வதேச விண்வெளி மாநாட்டின் விண்வெளி உந்துமத் துறையின் உறுப்பினர், இந்திய அறிவியல், பொறியியல் அமைப்புகள் (சொசைட்டி ஆஃப் சிஸ்டம்ஸ் ஃபார் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ISSE) உறுப்பினர்.

இந்தியப் பொறியாளர்கள் நிறுவனத்தின் ‘சான்றான்’ (‘ஃபெலோ’) எனப் பல தகுதிகள் கொண்டவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது தமிழர் என்னும் உன்னதப் பெருமைக்கும் உரிய முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு 39 ஆண்டுகள் (1973-2011) இந்திய விண்வெளித் துறையில் பணியாற்றிய விஞ்ஞானியின் அறிவியல். வாழ்த்துக்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version