சென்னை:
மார்ச் 15 ஆம் தேதியன்று, கட்சியின் பெயரையும் கட்சிக் கொடியையும் அறிமுகப் படுத்தவுள்ளார் டிடிவி தினகரன். நடிகர் கமல்ஹாசன் கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகப் படுத்தியுள்ள சூழலில், தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது; அதை நிரப்பவே நான் வருகிறேன் என்று ரஜினிகாந்த் பேசியுள்ள நிலையில், தமிழக அரசியலில் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்று ஆதரவாளர்களால் விளம்பரப்படுத்தப் படும் டிடிவி தினகரன் மார்ச் 15ல் கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப் படுத்தவுள்ளார்.
அதிமுகவை மீட்பதே லட்சியம், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டே தீருவோம் என்று ஒரே குறிக்கோளில் இயங்க்கிவந்த டிடிவி தினகரன், பின்னாளில் எடப்பாடி அணியிடம் இருந்து மீட்க மேற்கொண்ட முயற்சிகள் நடக்காததால், தனது ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள புதிய கட்சி, புதிய சின்னம், புதிய பெயர் என அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடத்தேர்தலில் அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, தொகுதியில் உள்ள பெண்களின் வீடுகளில் குக்கர் விசில் பலமாக அடிக்கும்படி பார்த்துக் கொண்டார். .அவரது குக்கரின் விசில் சத்தத்தில், இரட்டை இலை வாடி வதங்கியது. உதயசூரியன் உருக்குலைந்து போட்ட காசைக்கூட வாங்க முடியாமல் சுருண்டு படுத்தது. தாமரையோ நோட்டாவுடன் போட்டியிட்டுத் தோற்றது. நோட்டு மயமாய் தொகுதி ஆனபோதும், நோட்டா மட்டும் சில யோக்கியர்களின் புண்ணியத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
இத்தகைய நம்பிக்கையை தன் ஆதரவாளர்களிடம் விதைத்து விட்ட தினகரன், அவர்களைத் தக்க வைக்க இப்போது பெரும் பாடு படுகிறார். காரணம், தினகரனுடன் தொடர்பில் உள்ளவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்கள் எடப்பாடி குழுவினர். இதனால் ஏதோ ஒரு கட்சிப் பதவியில் அமர்ந்து கொண்டு அவரவர் ஊரில் அரசாங்கம் செய்து கொண்டிருந்த கட்சிக்காரர்களெல்லாம் கதி கலங்கிப் போயுள்ளனர். வேறு வழி இல்லாததால், கட்சியை துவங்கி, ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் டிடிவி தினகரன்.
இரட்டை இலை மீட்பு தோல்வியடைந்ததால், தாம் போட்டியிட்டு வென்ற குக்கர் சின்னத்தையே தனக்கு வரும் தேர்தல்களில் ஒதுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு தில்லி உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி விட்டது. எனவே, குக்கர் கைக்கு வந்து விட்டது. தொடர்ந்து விசிலடிக்கவும் தயாராகிவிட்டது. ஆனால், தாம் ஒரு கட்சியின் பெயரைப் பதிவு செய்தாக வேண்டுமே என்று மூன்று பெயர்களைக் கொடுத்து, ஏதோ ஒன்றை கோரினார். அதனையும் பரிசீலித்து வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் என்ற மூன்று பெயர்களில் ஒன்றை வழங்குமாறு டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கேட்டுள்ளார்
ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பெயர்களை டிடிவி தினகரன் தனது கட்சிக்கு பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸ், எடப்பாடி தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவர்களின் பெயர்கள் இல்லாமல் தினகரன் செயல்பட வாய்ப்பில்லை. மேலும் உயர்நீதிமன்றமும் இந்த 3 பெயர்களில் ஒன்றை வழங்குமாறு கூறிவிட்டதால், எப்படியும் அதிமுக., என்பதன் சுருக்கம் இந்தப் பெயர்களில் வந்துவிடும்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியிருப்பது…
மதுரை மேலூரில் 15-ஆம் தேதி நடக்கும் விழாவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. அன்று காலை 9 மணிக்கு கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பெயர் அறிவிக்கப்படும். அதிமுகவை கைப்பற்றும் வரை தனி ஒரு இயக்கமாக செயல்படுவோம். மேலூரில் நடைபெறும் கூட்டத்துக்கு தொண்டர்கள் அதிக அளவில் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.