மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராகச் சேர்க்கும் விதம் இது தான் போலும் என்று கூறி, தனக்கு வந்த இமெயில் கடிதங்களை வெளியிட்டிருக்கிறார் ஹெச்.ராஜா.
ஆங்கிலம், தமிழில் வந்த அந்தக் கடிதங்களில், அன்புக்குரிய ஹெ.ராஜா சர்மா, வணக்கம், உறுப்பினராகச் சேர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றி. நீங்களும் நானும் நாம் ஆனோம். நாளை நமதே! இது உங்களுக்கான உறுப்பினர் அடையாளமாகும் (…) என்றும் மாறாத அன்புடன் கமல்ஹாசன்…
இப்படி கமல்ஹாசனின் கையெழுத்திட்டு, [email protected] எனும் இமெயில் முகவரியில் இருந்து வந்த மின்னஞ்சல் கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
முன்னதாக பாஜக., தமிழக தலைவர் தமிழிசையும் இதே போல் தனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து தெரிவித்திருந்தார். அதற்கு, மிஸ்ட் கால் மூலம் நீங்கள் உறுப்பினர் சேர்த்தீர்கள், அவர்கள் இ மெயில் மூலம் கிடைக்கும் மின்னஞ்சலுக்கெல்லாம் அனுப்பி உறுப்பினர் சேர்க்கிறார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள் நெட்டிசன்கள். ஆனால், மய்யம் பொறுப்பாளர்களோ, தெலைபேசி எண்ணும் முகவரியும் கொடுத்து பதிவு செய்தவர்களுக்குத்தான் அப்படி மின்னஞ்சல் வரும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஹெச்.ராஜாவும் இப்படி தனது டிவிட்டரில் கருத்திட்டுள்ளார். ஆனால், வேறு எந்தக் கட்சிக் காரர்களும் இது போல் இன்னும் புகார் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இது தான் போல. pic.twitter.com/tJ7HNZoJar
— H Raja (@HRajaBJP) March 13, 2018