எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மார்ச்-15. நாளை டிடிவி தினகரன் புதிய கட்சியைத் தொடங்குகிறார். அதற்கான அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறி, ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், நாளை மாலை 5 மணிக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், வியாழன் மாலை 5 மணிக்கு எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வின் செயல்பாடும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
நாளைதான் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
டி.டி.வி.தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை நாளை மாலை அறிவிக்கிறார். தினகரன் அணிக்கு தங்கள் தரப்பில் இருந்து மேலும் எம்.எல்.ஏ.க்கள் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அதிமுக., தலைமை எடுத்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.