சென்னை: காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, இன்று மாலை கூடுகிறது தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!
காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இன்று மாலை 3.30 மணி அளவில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. மதியம் 1.10 மணி அளவில் தமிழக பட்ஜெட் உரை முடிந்ததும், சபாநாயகர் மீண்டும் 3.30 மணி அளவில் அவை கூடுவதாகக் குறிப்பிட்டார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அந்தத் தீர்ப்பின்படி 6 மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; தமிழகத்துக்கு 177.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் குறிப்பிட்டது.
இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்காக, ஒரு திட்ட அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இதை அடுத்து, பட்ஜெட் விவாதம் நடைபெறுவதாக இருந்த நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அதிமுக., எம்.பி.க்கள் நடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று தமிழக அரசை கண்டித்து, கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக., உறுப்பினர்கள், இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை 3.30 மணி அளவில் சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை 10.30க்குத் தொடங்கிய பட்ஜெட் உரைக் கூட்டம், மதியம் 1.10 வரை நீடித்தது. சுமார் 2.30 மணி நேரத்துக்கு பட்ஜெட் உரையை நின்றபடி வாசித்தார் ஓ.பி.எஸ்.