சென்னை: சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திரையரங்க காட்சிகள் இல்லாமல் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
மத்திய அரசு, திரைப்படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. மேலும், மாநில அரசு கேளிக்கை வரி விதிப்பதால், இது மிக அதிகமாக இருக்கிறது என்று கூறி, கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கேளிக்கை வரி ரத்து தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் கேளிக்கை வரியை ரத்து செய்தல், லைசென்சை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
புதுச்சேரியில் உள்ள 12 திரையரங்குகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் சென்னையில் உள்ள திரையரங்குகள் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் திரையரங்குகள் வழக்கம் போல் இயங்குகின்றன.