சென்னை: நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் துவங்கிய புதிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிச் சென்றது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று அக்கட்சியின் தங்க.தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன், அதிமுக.,வை மீட்பதாகக் கூறி, அரசியல் அமைப்பு ஒன்றை மார்ச் 15ஆம் தேதி அன்று தொடங்கினார். அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரையும் சூட்டினார். ஆனால், அவர் சூட்டிய இந்தப் பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவின் பெயரும் இல்லை என்று கூறி, நாஞ்சில் சம்பத் அதிருப்தி அடைந்தார். இது குறித்த தகவல்கள் கடந்த இரு தினங்களாக உலா வந்தது. கட்சியின் பெயர் சூட்டு விழாவில் கூட அவர் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், அவர் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் மூலம், திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாஞ்சில் சம்பத் எடுத்த முடிவு குறித்தும், அவர் அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறியது குறித்தும் அறிந்த டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தங்க. தமிழ்ச்செல்வன், அவரது முடிவு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவருடன் பேச முயற்சி மேற்கொள்ளப் படும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. அது அவருக்கு தெரியும். அம்மா என்ற பெயரிலேயே திராவிடமும் அண்ணாவும் அடக்கம்தான் என்று கூறினார்.