திமுகவில் கணக்கு கேட்டார் என்பதற்காக எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. அவர் கணக்கு கேட்டபோது அவரை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அவர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார். ஆனால் அவரை கட்சியில் இருந்து விலக்கி அவர் மீது கடுமையான விமர்சனங்களை திமுக வைத்ததால், எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்து ஆட்சியையும் பிடித்தார். அதுமட்டுமின்றி அவர் உயிரோடு இருந்தவரை ஆட்சியை திமுகவால் பிடிக்க முடியவில்லை
இந்த நிலையில் ‘சிஸ்டம் சரியில்லை’ மற்றும் வெற்றிடம் உள்ளது என இரண்டு வசனங்களை இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சியில் பேசிய ரஜினியை திமுக அவ்வப்போது விமர்சித்து அவரை பெரிய ஆளாக்க முயற்சிக்கின்றது. குறிப்பாக சமீபத்தில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் திமுகவின் பேச்சாளர் சைதை சாதிக், திண்டுக்கல் லியோனி, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ரஜினியை விமர்சனம் செய்து பேசினர்.
அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பே ரஜினியை விமர்சனம் செய்து வரும் திமுக, அவர் அரசியல் கட்சியை தொடங்கியவுடன் எப்படி விமர்சிக்கும் என்று சொல்லவே தேவையில்லை. திமுகவும், மற்ற எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தே ரஜினியை பெரிய ஆளாக்கிவிட்டுவிடுவார்கள் போல என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.