சென்னை: ஏப்ரல் 2ல் அதிமுக., நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் மருந்துக் கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கே.கே.செல்வன் அறிவிப்பு வெளியிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் பாராமுகமாக நடந்து கொண்டது என்றும் கூறி, ஏப்ரல் 2 ஆம் தேதி அதிமுக., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்பர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் அதிமுக.,வின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கமும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, மருந்துக்கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
இதனிடையே, ’அந்த மருந்துக் கடை’களை அதாவது, டாஸ்மாக் விற்பனையகங்களை ஒரு நாள் மூடி, அரசு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தண்ணிக்காக, அந்த தண்ணி கடையை மூடுங்க என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பரவலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்!