சென்னை: மக்களுக்கு குடிநீர் கிடைக்காத போது பதவி எதற்கு..? எனவே நான் ராஜினாமா செய்யப் போகிறேன் என்று அதிமுக.,வின் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி., முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை அவைத் தலைவரிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை 2 நாட்களில் அளிப்பேன் என்று முத்துக்கருப்பன் எம்.பி. தெரிவித்தார். மேலும், மத்திய பாஜக., அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும், அதிமுக., அவையை முடக்குவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார் முத்துக்கருப்பன்.
இந்த விவகாரம் இன்று தமிழக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்த முத்துக்கருப்பனின் ராஜினாமா முடிவு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதனிடையே, அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் ராஜினாமா செய்வதை நான் வரவேற்கிறேன் என்று கூறிய ஸ்டாலின், என்ன அழுத்தம் கொடுத்தாலும் மோடி செவி சாய்க்கமாட்டார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கமல் கூறியிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்தார். மேலும், என்ன அழுத்தம் கொடுத்தாலும் பிரதமர் மோடி மசியப்போவதில்லை, பிரதமரை சந்திப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பதாலேயே அவரை கருப்புக்கொடியுடன் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார் ஸ்டாலின்.
மேலும், இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால், தி.மு.க. உறுப்பினர்களும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர் என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.
இதனிடையே, அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா செய்வது போல், காவிரிப் பிரச்னைக்கு மூல காரணமான திமுக., தனது எம்.பி.க்களை ராஜினாமா செய்யக் கோருமா என்று அரசியல் மட்டத்தில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. அவர்கள் செய்தால் நாங்கள் செய்வோம் என்று ஸ்டாலின் கூறுவது வெற்று அரசியல் என்றும், வழக்கம் போல், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக குறைந்த பட்சம் திமுக., தலைவரிடமாவது ராஜினாமா கடிதம் கொடுத்து வழக்கமான அரசியல் நாடகத்தையாவது திமுக., அரங்கேற்றுமா என்றும் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் தொடரத்தான் செய்கின்றன.
குறிப்பாக திமுக.,வின் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி என நால்வரும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா திமுக., என்று கேள்வி எழுப்பப் படுகிறது.
கனிமொழியின் பதவிக்காலம் 2019 ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிகிறது. திருச்சி சிவாவின் பதவிக்காலம் 2020 ஏப்ரல் 1 வரை உள்ளது. மற்ற இருவரின் பதவிக்காலம் 2022 ஜூன் 29 வரை உள்ளது. எனவே இவர்கள் நால்வரையும் காவிரிக்காக ராஜினாமா செய்யச் சொல்லி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து திமுக., தான் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் கோரிக்கைகள் இப்போது பலமாக எழத் துவங்கியுள்ளன.